மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!
மழை பெய்ய வேண்டி சிவகங்கையில் இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
சிவகங்கை: சிவகங்கை பகுதியில் நிலவும் கடும் வறட்சியை போக்கவும், மழை பெய்ய வேண்டியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் குளங்களிலும், தண்ணீர் இல்லாமல், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும், கால்நடைகளும் குடிநீர் கிடைக்காமல் தவித்து அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக சிவகங்கையில் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உள்ளதால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மழை பெய்தால் மட்டும் அனைவரும் கோடையிலிருந்து மீள முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மழை பெய்ய வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை கிளையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் மழை வேண்டி ஆண்கள் மேல்சட்டைகளை திருப்பிப் போட்டும், கைகளை நீட்டியவாறு சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
சிவகங்கை மாவட்ட தலைவர் ரபீக் முகமது தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில், மாவட்டத் துணைச் செயலாளர் சிஹாபுதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் வரிசை முகமது, சிவகங்கை கிளை தலைவர் ஷாஜகான், செயலாளர் ராஜா முகமது, பொருளாளர் உமர், துணை தலைவர் சாகுல், துணைச்செயலாளர் பர்வீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.