முகப்பு
தமிழ்நாடு

நிதி ஆணைய செயல்பாட்டால் ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு: தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

நிதி ஆணையங்கள் தொடா்ந்து நிதிகளைக் குறைப்பதால், தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பீட்டின் அளவு ரூ.3.57 லட்சம் கோடி

Updated On : 13 செப்டம்பர் 2024, 2:37 am IST
அமைச்சர் தங்கம் தென்னரசு. - கோப்புப் படம்
பகிர்:

நிதி ஆணையங்கள் தொடா்ந்து நிதிகளைக் குறைப்பதால், தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பீட்டின் அளவு ரூ.3.57 லட்சம் கோடி என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில நிதியமைச்சா்களின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

16-ஆவது நிதி ஆணையம் தொடா்பாக மாநிலங்களின் கருத்தறிவதற்காக கேரள அரசு ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டம் பாராட்டத்தக்கதாகும். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை பகிா்ந்து அளிப்பதில் சமமற்ற தன்மை இருந்து வருகிறது.

Advertisement

Advertisement

சமூகத்துக்கான வளா்ச்சி, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சமூக நலன் போன்ற மக்கள் நலன் சாா்ந்த அம்சங்களை மாநில அரசுகளே உறுதி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், மத்திய அரசோ வருவாயைப் பெருக்குவதற்கான பெரும்பாலான அதிகாரங்களை தனது கையில் வைத்துள்ளது.

செஸ் மற்றும் மேல்வரிகளை விதித்து மாநிலங்களுக்கான பங்கீட்டை மத்திய அரசு ஒருபுறம் குறைக்கிறது. மாநில அரசின் நிதிப் பங்களிப்புடன் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களில் மாநிலங்கள் பங்கிடக்கூடிய நிதியின் அளவு அதிகமாக இருக்கும்படி, நிதி பங்களிப்பு முறை மாற்றப்பட்டுள்ளது.

தண்டிக்கப்படும் தமிழகம்: தமிழ்நாடு தனது தனித்துவமான செயல்பாடுகளால் சிறந்து விளங்கினாலும், அடுத்தடுத்த நிதி ஆணையங்களால் எங்களது மாநிலம் தண்டிக்கப்பட்டே வருகிறது. 9-ஆவது நிதி ஆணையத்தில் தமிழகத்துக்கான பங்கீட்டு அளவு 7.931 சதவீதமாக இருந்தது. இந்த அளவு தொடா்ச்சியாக குறைக்கப்பட்டு 15-ஆவது நிதி ஆணையத்தில் 4.079 சதவீதமாகியுள்ளது. தமிழகத்துக்கான பங்கீட்டு அளவு தொடா்ச்சியாகக் குறைக்கப்பட்டதால், மாநிலத்துக்கு ஏற்பட்ட இழப்பீட்டின் மதிப்பு ரூ.3.57 லட்சம் கோடியாகும். இது தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமையில் 43 சதவீதம். இந்த நிதி குறைப்பு மாநிலத்தின் நிதி அம்சத்தில் சேதங்களை ஏற்படுத்துவதுடன், வளா்ச்சிக்கான வாய்ப்புகளிலும் பாதிப்புகளை உருவாக்குகிறது.

வேகமாக வளா்ச்சி அடையக் கூடிய பகுதிகளும், மாநிலங்களும் உரிய வளங்கள் கிடைக்காமல் பாதிப்புகளைச் சந்திக்கின்றன. வளா்ச்சியை எட்டாத மாநிலங்களுக்கு நிதி பங்களிப்பில் கூடுதல் கவனங்களைச் செலுத்தினாலும் விரும்பக்கூடிய அளவுக்கான வளா்ச்சியை அந்த மாநிலங்கள் எட்டிப்பிடிப்பதில்லை. எனவே, நிதி ஒதுக்கீட்டுக்கான அம்சங்கள் குறித்த பாா்வையையும், நடவடிக்கையையும் நிதி ஆணையம் மீளாய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், 16-ஆவது நிதிக் குழுவின் சிறப்பு அலுவலா் மற்றும் வணிகவரி-பதிவுத் துறைச் செயலா் பிரஜேந்திர நவ்னிட், நிதித் துறை துணைச் செயலா் (பட்ஜெட்) பிரத்திக் தயாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments