முகப்பு
தமிழ்நாடு

தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!

தவெக ஆட்சியிலும் கடன் இரு மடங்காக உயரும் என்று சவால் விடுத்திருப்பது பற்றி...

Updated On : 17 ஜூன் 2026, 2:06 pm IST
தங்கம் தென்னரசு - கோப்புப் படம்
பகிர்:

திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன் வாங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

அப்போது, வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்து, ரூ. 10 லட்சம் கோடியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திமுக அரசின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது திமுக ஆட்சியில் இருமடங்கு கடன் வாங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவர் பேசியதாவது:

”தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தின் தன்மையின் வரலாற்றை பார்ப்பது மிகவும் அவசியம். 2006 - 07 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற கடன் ரூ. 57 ஆயிரம் கோடியாக இருந்தது.

2011 - 12 காலகட்டத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போது இரண்டு மடங்காக கடன் அதிகரித்து ரூ. ஒரு லட்சம் கோடியானது. 2016 - 17 காலகட்டத்தில் கடன் ரூ. 2 லட்சத்தைக் கடந்தது. 2021 - 21 எடப்பாடி பழனிசாமி விட்டுச் சென்றபோது, ரூ. 4.85 லட்சம் கோடி உயர்ந்தது.

அதன்பிறகு, தற்போது ரூ. 10 லட்சம் கோடியாக வந்துள்ளது. வரலாற்று ரீதியிலாக கடன் இரு மடங்கு அதிகரித்து வருகின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடனானது இந்த முறையில்தான் வரும்.

தவெக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், அவர்களின் கடன் விகிதம் 20 லட்சம் கோடியாக உயரும் என்பதை சவாலாக விடுக்கிறேன். இதனை யாராலும் தவிர்க்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கின்றேன்.

இந்த நிதியமைச்சகத்துக்கு மற்றொரு சவாலையும் விடுகிறேன். நாங்கள் வாங்கிய சராசரி கடனைவிட, குறைத்து கடன் வாங்கினோம் என்று நிரூபித்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்.

நாங்கள் கொண்டு வந்த திட்டங்களையும் நிறைவேற்றி, நீங்கள் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்றி, நிதி மேலாண்மை மேம்படுத்தி, நாங்கள் வாங்கிய கடனைவிட குறைவாக வாங்கிக் காட்டுங்கள்.” என்று பதிலளித்துள்ளார்.

summary

Debt will rise to ₹20 lakh crore under TVK rule! Thangam Thennarasu's challenge!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.