மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு!
வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருப்பது பற்றி...
தவெக அரசு வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கைக்கு திமுகவின் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
அப்போது, வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்து, ரூ. 10 லட்சம் கோடியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திமுக அரசின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
”இந்த வெள்ளை அறிக்கை என்பது வெறும் வெற்று அறிக்கையாகும். இதன் நோக்கம், தவெக அரசு தனது இயலாமையை மூடி மறைக்கக் கூடிய உக்தியாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வழி தெரியாமல், கையை விரித்து மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள திமுக மீது பழிச் சொல்லும் முயற்சியாகதான் இருக்கிறது.
வெள்ளை அறிக்கை வெளியீடு என்பது முதல்முறை இல்லை. இதற்கு முன்னதாக இரண்டு முறை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், 2021 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியிலும் வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள். தற்போது தவெக வெளியிட்டுள்ளது.
2001 வெள்ளை அறிக்கையானது 10 ஆண்டுகள் கணக்கெடுக்கப்பட்டது. 2011 வெள்ளை அறிக்கையானது 15 ஆண்டுகள் கணக்கிட்டு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தவெக வெறும் 5 ஆண்டுகள் ஆட்சியை மட்டுமே கணக்கிட்டுள்ளனர்.
இதற்கான காரணம் என்ன? முந்தைய ஆட்சி நிதிநிலையை மறைப்பதற்கு காரணம் என்ன? யாரைக் காப்பாற்ற அதிமுக ஆட்சி நிதிநிலையை மறைத்தார்கள்? யாருடைய தயவை எதிர்பார்த்து அதிமுகவை விட்டார்கள்?
மக்களிடம் இருந்து என்ன சொல்லி தப்பித்துக் கொள்வது? ஆழம் தெரியாமல் காலைவிட்டு, நிறைவேற்ற முடியாத வாண வேடிக்கை வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளனர். தற்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
2021 அறிக்கையின் இறுதியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனச் சொல்வதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்று தெளிவாக குறிப்பிட்டோம். ஆனால், தற்போதைய அறிக்கையில், புதிய திட்டங்களில் நிறைவேற்றுவதில் சிரமம் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள்.
எத்தகைய நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் எனக் கூறிய திமுக முதல்வர் எங்கே?, ஆனால், எடுத்தவுடன் நிதி நெருக்கடியை காரணம் காட்டும் தவெக முதல்வர் எங்கே?
நாளைய ஆளுநர் உரையில் கொள்கையில் புதிய திட்டங்களை சொல்ல வேண்டும். ஆனால், நாளை எங்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லாமல் சொல்வதை போன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடன் விகிதம் என்பது ஒவ்வொரு 5 ஆண்டுகளும் இரண்டு மடங்காக அதிகரிக்கும். தவெக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், அவர்களின் கடன் விகிதம் 20 லட்சம் கோடியாக உயரும் என்பதை சவாலாக விடுக்கிறேன். இதனை யாராலும் மாற்ற முடியாது.
அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி, நாங்கள் வாங்கிய சராசரி கடனைவிட, குறைத்து கடன் வாங்கினோம் என்று நிரூபித்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
குஜராத்தை ஒப்பிட்டுள்ளார்கள். அந்த மாநிலத்தில் காலை உணவுத் திட்டம், மகளிர் இலவசப் பேருந்து, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற நலத்திட்டங்களை அவர்கள் செய்யவில்லை.” எனத் தெரிவித்தார்.