கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை: 13 பேரின் ஆயுள் தண்டனை உறுதி! - உச்ச நீதிமன்றம்
முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தமிழ்நாடுகண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை: 13 பேரின் ஆயுள் தண்டனை உறுதி! - உச்ச நீதிமன்றம்
முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
கடந்த 2003-ல் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு பகுதியில் காதில் விஷம் ஊற்றிக் கொல்லப்பட்ட கண்ணகி - முருகேசன்ஆணவக் கொலை வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனையும் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும் 12 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து தண்டனை பெற்ற கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதன்படி, கண்ணகியின் அண்ணன், தந்தை, காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 13 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள சாமிக்கண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பிஇ (கெமிக்கல்) பட்டதாரி. அதே பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்ற பெண்ணை காதலித்து கடந்த 5-5-2003 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டார். எனினும், அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்த நிலையில் கண்ணகியை அவரது குடும்பத்தினர் விழுப்புரத்திலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வந்தனர்.
எனினும், இத்திருமணத்தினால் தங்களது கௌரவம் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த பெண்ணின் பெற்றோர் 8-7-2003 அன்று வண்ணாங்குடிகாட்டிலுள்ள மயானத்தில் முருகேசன் -கண்ணகி ஆகியோரது வாய், காதில் விஷத்தை ஊற்றி கொலை செய்து பின்னர் உடலை தனித்தனியாக எரித்துள்ளனர்.
இச்சம்பவம் ஊடகங்கள் மூலமாக வெளிவந்த நிலையில் முருகேசனின் பெற்றோர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, காவல்துறை ஆய்வாளராக இருந்த மா.செல்லமுத்து (66), உதவி ஆய்வாளராக இருந்த பெ.தமிழ்மாறன் (51) ஆகியோர் ஆணவக் கொலையை மூடி மறைக்கும் நோக்குடன் செயல்பட்டதோடு, முருகேசன், கண்ணகி தரப்பில் தலா 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, இந்த வழக்கினை சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென சாமிக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதனடிப்படையில், வழக்கு விசாரணை மேற்கொண்ட சிபிஐ 9-3-2009 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், கண்ணகி-முருகேசன் ஆகியோரை சாதிய வன்கொடுமையால் கண்ணகி குடும்பத்தினர் ஆணவப் படுகொலை செய்ததாகக் குறிப்பிட்டனர். இதற்கு உடந்தையாக முருகேசன் உறவினர்கள் 2 பேரும், அப்போதைய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோரும் இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தினசரி விசாரணை நடத்தும் வகையில் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி எஸ்.உத்தமராசா தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில், முருகேசனின் உறவினர்கள் செ.அய்யாசாமி (61), பா.குணசேகரன் (59) ஆகியோர் மிரட்டப்பட்டு சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு இக்கொலையில் சம்பந்தம் இல்லாததால் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தார். மீதமுள்ள 13 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். அதன்பின்னர் ஆணவக் கொலைக்கு முக்கிய காரணமாக விளங்கிய பெண்ணின் சகோதரர் து.மருதுபாண்டியன் (49) என்பவருக்கு சாகும் வரையில் தூக்கிலிடும் மரண தண்டனையும், ரூ.4.65 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
மேலும், பெண்ணின் தந்தை சி.துரைசாமி (68), அவரது மகன் ரெங்கசாமி (45), உறவினர்களான கோ.கந்தவேலு (54), கோ.ஜோதி (53), இரா.மணி (66), இரா.தனவேல் (49), வை.அஞ்சாபுலி (47), கா.ராமதாஸ் (52), ந.சின்னதுரை (50) ஆகியோருக்கு கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.4.15 லட்சம் அபராதமும் விதித்தார்.
அப்போதைய காவல் ஆய்வாளர் மா.செல்லமுத்து (66), உதவி ஆய்வாளர் பெ.தமிழ்மாறன் (51) ஆகியோருக்கு எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1.15 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், இருவரும் தலா ரூ. 3 லட்சத்தை பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
தமிழகத்தையே உலுக்கிய ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பேர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து 13 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
கடந்த 2022 ஜூன் மாதம் இந்த வழக்கில், கண்ணகியின் அண்ணனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் கண்ணகியின் தந்தை, காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்பட 12 பேருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.