வீடு வீடாகச் சென்று மக்களை சந்தியுங்கள்: இன்று பிரசாரத்தை ரத்து செய்த விஜய் அறிவுரை
வீடுக்கு வீடு தேடித் தேடி நேரில் மக்களை சந்தியுங்கள் என இன்று தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்த தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள் என்று தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காரைக்குடியில் நேற்று அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பின் வந்ததால், கூட்டத்தில் பேசாமலேயே சென்றிருந்த நிலையில், கடலூரில் இன்று நடைபெறவிருந்த விஜய் பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த கடலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த காரணங்களோ விளக்கமோ வெளியாகவில்லை.
ஆனால் அதற்கு மாறாக, விஜய் தன்னுடைய தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள். இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.