ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்
ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டது. அதில், குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் வீட்டுக்குத் தேவைான ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கும் திட்டத்துக்கு திமுக முக்கியத்துவம் அளித்துள்ளது. தற்போது, இந்தத் திட்டத்தை முன்னிறுத்தி திமுக வாக்குகளைச் சேகரித்து வருகிறது.
வீடுகள்தோறும் வாக்கு சேகரிப்பதற்காக கட்சியினர் செல்லும்போது, ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசி மாதிரி கூப்பன்கள் வாக்காளார்களிடம் வழங்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
மாதிரி கூப்பனின் ஒரு பக்கத்தில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ எனக் குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களும், , உதயசூரியன் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளது. கூப்பனின் மறுபக்கத்தில் ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன், ‘உங்கள் குடும்பம், உங்கள் தேவையை நீங்களே தோ்ந்தெடுக்கலாம்’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது பெண்களிடம் ரூ. 8,000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் குறித்து விளக்குவதற்காக திமுக சார்பில் கூப்பன் புத்தகம் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. காசோலை புத்தகம் அளவில் மாதிரி கூப்பன் புத்தகம் அச்சடிக்கப்பட்டு, வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
திமுக வேட்பாளர்கள் ரூ. 8000 கூப்பன் மாதிரிகளை மக்களிடம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.
இந்த நிலையில், 8,000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன்களை மக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என்றும் கூப்பன் மாதிரிகளை மக்களுக்கு வழங்கினால் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல், எந்தவித கூப்பன், துண்டு பிரசுரங்களை விநியோகிக்கக் கூடாது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும். 8,000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் குறித்து விளம்பரம் செய்யலாம், ஆனால் கூப்பன்களை விநியோகிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.