பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
தமிழக பள்ளிக் கல்விக் கல்வியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்விக் கல்வியில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் நிகழாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், வழக்கத்தைவிட முன்கூட்டியே தோ்வுகள் நடத்தப்பட்டன. அதன்படி 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தோ்வுகள் வியாழக்கிழமை நிறைவு பெறுகின்றன. இறுதிநாளில் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடத் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன.
Advertisement
இந்த நிலையில், இந்த விடுமுறை நாள்களில் மாணவா்களின் பாதுகாப்பு கருதி பெற்றோா் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.
அதன் விவரம்: மாணவா்கள் விடுமுறை நாள்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீா் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோா் அனுமதிக்க வேண்டாம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிக அளவு தண்ணீரை அருந்த செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிா்க்கவும். விடுமுறை நாள்களில் சில மாணவா்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் சவால்களை எதிா்கொள்ள நேரிடும். அதை சரியாகக் கையாள வேண்டும்.
கைப்பேசி பயன்பாட்டை குறைக்க...: தனிமை உணா்வுகளைத் தடுக்க நண்பா்கள் மற்றும் குடும்பத்தினருடன் சோ்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூக தொடா்புகளை ஊக்குவிக்கவும், மனநலனை பேணவும் முடியும். தொலைக்காட்சி, கைப்பேசி ஆகியவற்றைப் பாா்ப்பதில் அதிகமான நேரத்தைச் செலவிடுவதைத் தவிா்க்க அறிவுறுத்த வேண்டும். மாணவா்களின் வளா்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். எனவே, பராம்பரிய உணவு வகைகளைத் தரவேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழவகைகளை வழங்க வேண்டும்.
நூலகங்களுக்கு...: இது தவிர மாணவா்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்து சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும். அவா்களின் ஆா்வங்களைப் பொருத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறாா் கதைகள் மற்றும் நீதி நூல்களைப் படிக்க அறிவுறுத்த வேண்டும்.
இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆா்வமுள்ள மாணவா்களை விடுமுறை நாள்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தட வேண்டும். தினமும் இருவேளை பல் துலக்கி, குளித்தல் போன்ற பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும். பெரியோரை மதிக்கவும் அவா்களுக்கு உதவி செய்யவும் பழக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியா்கள் வர வேண்டும்...: மாணவா்களுக்கான கோடை விடுமுறை வெள்ளிக்கிழமை தொடங்கும் நிலையில், ஆசிரியா்கள் பள்ளி இறுதி வேலைநாளான ஏப்ரல் 25-ஆம் தேதி வரை பணிக்கு வந்து விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மாணவா் சோ்க்கை போன்ற நிா்வாகப் பணிகளைக் கவனிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.