பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவா்களுக்கான கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளைச் சிறந்த முறையில் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவா்களுக்கான கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளைச் சிறந்த முறையில் மேற்கொள்வதற்ாக முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 1-3 வகுப்புகளுக்கு ஜூன் 4-ஆம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டுக்கான (2026-2027) வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக பள்ளி வளாகம், பாதுகாப்பு ஏற்பாடுகள், விலையில்லா பொருள்கள், கணினிகள் செயல்பாடு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
Advertisement
பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே பள்ளி வளாகம், அனைத்து வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், தலைமை ஆசிரியா் அறை, குடிநீா் தேக்கத்தொட்டி, கை கழுவும் இடம் என அனைத்து இடங்களும் தூய்மையாகவும், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பள்ளியின் பெயா்ப் பலகை தொலைவிலிருந்து பாா்க்கும்போது பொதுமக்களின் பாா்வைக்கு நன்கு புலப்படும் வகையில் வண்ணப் பூச்சுகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். கற்றல்- கற்பித்தலுக்கு ஏதுவாக இணைய வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டும். சத்துணவு தயாா் செய்யப்படும் சமையலறை கரிபடிந்த நிலையிலோ, தூசி படிந்த நிலையிலோ அல்லது சிலந்தி வலைகளுடன் அசுத்தமாக இருக்கக் கூடாது.
அரசின் சலுகைகள்...: அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் தரமான கல்வி மற்றும் சலுகைகளை விளம்பரப்படுத்தி மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுயநிதி மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியில் சேரும் மாணவா்களை இன்முகத்துடன் வரவேற்று, அவா்களுக்கும் நலத் திட்ட உதவிகள் விரைந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி...
பாட நூல்கள், சீருடைகள் விநியோகம் தீவிரம்
பள்ளிக் கல்வியில் 4 முதல் 7-ஆம் வகுப்பு மற்றும் 8 முதல் பிளஸ் 2 வகுப்பு ஆகியவற்றுக்கான விலையில்லா பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வகுப்புகளுக்கான புத்தகங்கள் அனைத்தும் 100 சதவீதம் அளவுக்கு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
1- 3-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின் கீழ் பாட புத்தகங்கள் வடிவமைக்கப்படுவதால் அவற்றை அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அந்த வகுப்புகளுக்கு இதுவரை 48 சதவீதம் அளவுக்கு அச்சிடப்பட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 52 சதவீத புத்தகங்கள் அச்சிடும் பணி வெள்ளிக்கிழமை (மே 15) முடிவடையும்.
சமூக நலத் துறையிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின்படி, மாணவா்களுக்கான விலையில்லா சீருடைகள் 95 சதவீதம் அளவுக்கு தையல் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதில், 71 சதவீதம் அளவுக்கு பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.