முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பள்ளிக் கல்வித் துறைக்குப் புத்துயிர் தேவை!

ஒரு குழந்தையின் பள்ளிக் கல்வி, அதன் பதினேழாம் வயது வரை நீடிக்கிறது.

Updated On : 21 மே 2026, 3:56 am IST
பள்ளி மாணவர்கள் - பிரதிப் படம்
பகிர்:

ஒரு குழந்தையின் பள்ளிக் கல்வி, அதன் பதினேழாம் வயது வரை நீடிக்கிறது. மனித வாழ்வின் மிக மிக முதன்மையான இந்த "பள்ளிக் கல்வி' காலகட்டமே, ஒருவரின் வாழ்நாள் முழுவதுமான உடல் நலனையும், அறிவு நலனையும், மிகவும் குறிப்பாகப் பண்பு நலனையும் தீர்மானிக்கிறது. எனவே, அந்தக் காலகட்டத்தை ஒரு குழந்தையின் "சமூகக் கருவறைக் காலம்' என்றும் குறிப்பிடலாம். ஆனால் கடந்த 50 ஆண்டுகளில், மிகவும் அதிகமாக வதைத்துப் பயிற்றுவிக்கப்பட்டு பெருமளவில் தங்களது இயல்பறிவை இழந்தவர்கள், கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்களாகவும் உரிய முறையில் வழிநடத்தப்படாதவர்களாகவும் மாறிப் போயுள்ளவர்கள் என இன்றைய நமது சமூகத்தின் பல லட்சக்கணக்கான குழந்தைகள் இரு வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் சிறுவர் - சிறுமிகளின் பதின்பருவ காலங்களில் பெரும்பகுதி, பள்ளிக் கல்விக் காலமாகவே அமைகிறது. அந்தக் காலகட்டங்களில் அவர்களுக்குப் புகட்டப்படுகின்ற நற்கல்வி முறைகள்தான், பிற்காலங்களில் அவர்களைப் பல்துறை ஆளுமையாளர்களாக வடிவமைக்கின்றன. எனவேதான், மாணவர்களின் வாழ்வில் உயர்கல்வியைவிட, பள்ளிக் கல்வியே முதன்மையான சிறப்புகளைக் கொண்ட வலிமையான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது.

தங்களின் கல்லூரி ஆசிரியர்களைச் சந்திப்பதைவிட வயது முதிர்ந்து ஓய்ந்திருக்கிற தங்களின் பள்ளி ஆசிரியர்களைத் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்து பெறுவதையே இன்றளவும் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்குக் காரணம், பள்ளிக் கல்வியும் பள்ளி ஆசிரியர்களுமே தங்களைப் பண்படுத்திப் பயிற்றுவித்து, உருவாக்கி உயர்த்தியதாக அவர்கள் உணருகிற உண்மைதான்!

Advertisement

Advertisement

"நிகழ்காலத்தின் மாணவர்களுக்கான மிகப் பெரிய சிக்கலாக வளர்ந்து கொண்டிருக்கிறது, கட்டுப்பாடுகளற்ற சமூக ஊடக நுகர்வுக் கலாசாரம். இதன் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைப்பதைவிட, பள்ளிப் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை மீட்டெடுத்தால்தான், தங்களின் கல்லூரிக் காலத்திலும் அதற்குப் பிறகும் அவர்கள் விழிப்புடன் இருப்பார்கள். பள்ளிக் கல்வியில் கற்பிக்கத் தவறிய நற்பண்புகளை உயர் கல்வியில் கற்பித்துப் போதிய அளவு வெற்றிபெற முடியாது' என்கிறார்கள், சமூக ஊடகக் கல்வி விழிப்புணர்வுச் செயற்பாட்டாளர்கள். எனவே, பள்ளிக் கல்வி என்பது பிள்ளைகளைப் படிக்க வைப்பது மட்டுமல்ல, வாழ்வில் மேன்மையுற ஏதுவாக அவர்களை வடித்தெடுப்பதும்தான்!

இந்த நிலையில் நமது நிகழ்காலத் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறையையும் அதன் கற்பித்தல் மற்றும் நிர்வாக முறைகளையும் கவனித்தால், நமக்கு ஏமாற்றங்களே மிஞ்சுகின்றன. இதில் ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. அவர்கள் எந்த நேரமும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டியவர்கள் என்கிற உண்மையைப் புறந்தள்ளி எப்போதும் ஏதோவொரு கணக்கெடுக்க வேண்டியவர்களாகவும், தங்களது துறையின் அலுவலர்களுக்கு எப்போதும் ஏதோவோர் அறிக்கையைத் தரவேண்டியவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர். மாணவர்களுக்குக் கற்பிக்கிற பணிகளை இரண்டாம் நிலையாக்குகிற பிற பணிகளே அவர்களின் நேரத்தைக் கபளீகரம் செய்கின்றன. வெறும் தேர்ச்சி விகிதங்களில் மகிழ்ந்து மூச்சுவிட்டுக் கொண்டால் போதும் என்கிற நிலையே அவர்களுக்கு நேர்ந்திருக்கிறது.

இன்றைய நிலையில் வளரிளம் பருவம் முதற்கொண்டு, இருபதுகளின் முதற்பகுதிவரை இருக்கின்ற இளையோரில், பல நூற்றுக்கணக்கானவர்கள் பல்வகைப்பட்ட குற்ற வழக்குகளில் சிக்குகின்றனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் மது உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பழக்கங்களுக்கு அடிமைகளாகி வருகின்றனர். சிறு சிறு சச்சரவுகளுக்காக உச்சகட்ட வன்முறையாளர்களாகின்றனர். பொது இடத்து நாகரிகம் குறித்துக் கடுகளவும் கவலைப்படாதவர்களாகவும் மாறிவருகின்றனர். இத்தகைய அவல நிலைக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், வெளியே சொல்லப்படாத வலிமையான காரணமாக விளங்குவது நமது பள்ளிக் கல்வித் துறையின், பள்ளிகளில் நற்பண்புகளைப் பயிற்றுவித்தல் முறையின் தோல்விகளே ஆகும்.

கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நமது பள்ளிக் கல்வித் துறை, துறை சார்ந்த அதன் சுற்றறிக்கைகளை பத்திரிகைச் செய்திகளாக வெளியிட்டு வருகிறது. அந்தத் துறையின் நிர்வாக ரீதியிலான சுற்றறிக்கைகள் பொதுவெளிகளில் முன்வைக்கப்படுவது ஏன் என்று தெரியவில்லை.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் புள்ளி விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடந்த வாரம் ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறது, பள்ளிக் கல்வித் துறையின் இயக்ககம். அடிக்கடி விடுப்பு எடுக்கிற ஆசிரியர்கள், நீண்ட காலமாக விடுப்பில் இருப்பவர்கள், முறையான தகவல் இன்றி தொடர் விடுமுறையில் இருப்பவர்கள் ஆகியோரின் விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் ஓர் உத்தரவிட்டது தொடக்கக் கல்வித் துறை இயக்ககம்.

அதே ஆண்டின் ஜனவரியில் ஆசிரியர்களின் கூடுதல் படிப்புக்கான ஊக்கத்தொகை விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஓர் உத்தரவிடப்பட்டது. தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயர்த்த கருத்துரு அனுப்ப வேண்டும் என்றும் ஓர் உத்தரவு பறந்தது.

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடுகிற மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறும் கடந்த 2024-ஆம் ஆண்டு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டது பள்ளிக் கல்வித் துறை. கற்பிக்கும் பணிகளுக்கு மட்டுமே ஆசிரியர்களைப் பயன்படுத்துங்கள் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், இப்படியானதோர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவற்றையெல்லாம்விட ஒரு நகைச்சுவை என்னவென்றால், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற அலுவலகங்கள் மற்றும் அலுவலர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து விரைவாக அனுப்பி வைக்குமாறு கடந்த 2022 செப்டம்பரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதுதான்.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கழிப்பறைகள், வகுப்பறைகள் போன்றவற்றைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், சத்துணவுச் சமையலறையில் சிலந்தி வலைகளை அப்புறப்படுத்துமாறும் கடந்த வாரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இவை போன்று, பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வாயிலாகப் பிறப்பிக்கப்பட்ட துறை சார்ந்த தகவல் சேகரிப்பு உத்தரவுகள் இன்னும் நிறைய உண்டு. இந்நிலையை முன்வைத்து நமக்கு பல்வேறு வகையான கேள்விகள் எழுகின்றன.

ஓர் இயக்ககம் சுறுசுறுப்பாக இயங்குவதைப்போன்ற ஒரு தோற்றத்தை பொது வெளியில் காட்டும்பொருட்டு இதுபோன்ற உத்தரவுகள் தட்டிவிடப்படுகின்றனவா? தமிழகத்தின் முதன்மையான ஒரு துறையின் இயக்ககம், தனது சுய முனைப்பில் தமது துறைசார்ந்த அனைத்துத் தரவுகளையும் திரட்டி வைத்துக் கொண்டு நிர்வாகம் செய்ய இயலாதா? நவீன தகவல் தொடர்பு இணையவழித் தொழில்நுட்பங்கள் எவையும் நமது பள்ளிக் கல்வித் துறையின் தகவல் ஒருங்கிணைப்புக்குப் பொருந்தி வரவில்லையா? குடிநீர்க் குழாய்களையும், கழிப்பறைகளையும் தூய்மையாக வைத்திருங்கள், சிலந்தி வலைகளை ஒட்டடை அடியுங்கள் என்பதெல்லாம் தங்களது துறைத் தலைமையின் உத்தரவாகக் கிடைக்கப் பெற்றால்தான் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்கிற நிலையிலா மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?

பள்ளிக் கல்வித் துறையின் இதுபோன்ற உத்தரவுகள் ஒருபுறமிருக்க, பள்ளிக் கல்வித் துறை தொடர்புடைய வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாத காரணத்தால் 2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, உடனே நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மையான அத்தனை நிர்வாகிகளும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.

இவற்றையெல்லாம்விட ஓர் இழிவான உத்தரவு அண்மையில் பிறப்பிக்கப்பட்டது. அதாவது, மாதிரிப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்புவரை பயிலும் மாணவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளனவா? அவர்களது பெற்றோர் சிறையில் உள்ளனரா? அவர்கள் அகதிகளா என்பன போன்ற விவரங்களைத் தலைமை ஆசிரியர்கள் சேகரித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதே அந்த உத்தரவு. வரம்பு மீறிய, "கல்வி' என்கின்ற உன்னதமான நோக்கத்தையே களங்கப்படுத்திச் சிதைக்கிற அந்த உத்தரவைக் கண்டித்து, கடந்த 5-1-2026 அன்று அதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

பல்வேறு வகையில் கடந்த பல ஆண்டுகளாக, பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிற நமது பள்ளிக் கல்வித் துறைக்குப் புத்துயிரூட்டுமா புதிய தவெக அரசு?

கட்டுரையாளர்:

கவிஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.