FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தலையங்கம்

எங்கே தவறுகிறோம்?

உயர் கல்விக்குத் தகுதியான மாணவர்களை உருவாக்காமல் இருப்பது நமது கல்வி அமைப்பின் குறைபாடாக இருப்பதைப் பற்றி...

Updated On : 14 ஜூலை 2026, 4:00 am IST
எங்கே தவறுகிறோம்?
பகிர்:

எந்தவொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் ஜிடிபியை வைத்தோ, அந்நியச் செலாவணிக் கையிருப்பை வைத்தோ மட்டுமே எடை போடப்படுவதில்லை. 2047-இல் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், உயர் கல்வி குறித்தும், ஒட்டுமொத்த கல்வித் தரம் குறித்தும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

பள்ளிக் கல்வியின் தரம் கேள்விக்குறியாக இருப்பது ஒரு புறம் என்றால், உயர் கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கை கவலைக்குரியதாக இருக்கிறது. இது குறித்து நாடு தழுவிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை என்பது அதைவிட வருத்தமளிக்கிறது. இந்தியா விடுதலை பெற்று 79 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும், 18 முதல் 24 வயதினரின் உயர் கல்விச் சேர்க்கை விகிதம் (கிராஸ் என்ரோல்மென்ட் ரேஷியோ) 30% அளவைக்கூட எட்டவில்லை.

கல்வித் தரத்திலும், உயர் கல்விக்கான சேர்க்கையிலும் மாநிலங்களுக்கு இடையே கடுமையான ஏற்றத்தாழ்வு காணப்படுவதையும் பார்க்க முடிகிறது. உயர் கல்வித் தகுதி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காத எந்தவொரு நாடும் வளர்ச்சி அடைந்த நாடாக உயர முடியாது என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.

Advertisement

Advertisement

இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற மௌலானா அபுல்கலாம் ஆசாத், காலனிய அடிமை மன நிலையில் இருந்து விடுபட்டு, வளர்ச்சி அடையும் சுதந்திர, ஜனநாயக நாட்டுக்கேற்ற கல்விக் கட்டமைப்பை உருவாக்க நினைத்தார். அதற்காக டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் 1948 நவம்பர் மாதம் பல்கலைக்கழகக் கல்வி ஆணையம் நிறுவப்பட்டது.

ஆகஸ்ட் 1949-இல் அந்த ஆணையம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில்தான் இன்றுவரை நமது உயர் கல்வி கட்டமைப்பு இயங்குகிறது. அதன் பரிந்துரைக்கு ஏற்பவும், நீட்சியாகவும் 1956-இல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உருவாக்கப்பட்டது. நாடு தழுவிய அளவில் அமையும் பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும், வழிகாட்டவும் யுஜிசி-க்கு அந்தச் சட்டம் அதிகாரம் வழங்கி இருக்கிறது. யுஜிசியால் அங்கீகரிக்கப்படும் பல்கலைக்கழகங்கள், யுஜிசியின் வழிகாட்டுதல்களையும், புரிதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டால்தான் பல்கலைக்கழகங்கள் அந்த அந்தஸ்தைப் பெறுகின்றன என்பதால், யுஜிசியின் வழிகாட்டுதலுக்குக் கட்டுப்பட்டவையாகின்றன. கல்வி என்பது மத்திய, மாநிலப் பொதுப் பட்டியலின்கீழ் அமைகிறது என்றாலும், யுஜிசி விதிமுறைகள்தான் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும், வழிகாட்டும் அமைப்பாக இருக்க முடியும். 1949 பல்கலைக்கழகக் கல்வி ஆணையத்தின் அறிக்கை (ராதாகிருஷ்ணன் அறிக்கை) பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்த வழிமுறைகளை வரையறுத்திருக்கிறது.

அரசியல் தலையீடுகளால் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசியல் ஊடுருவும்போது பல்கலைக்கழகங்களின் மரியாதையும் கேள்விக்குறியாவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல்கலைக்கழகங்களின் தரம் கேள்விக்குறியாக இருப்பதால்தான், நமது மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி கற்பதற்கு விழைகிறார்கள்.

2024-இல் 13 லட்சம் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கிறார்கள். 2013- 14 இல் வெறும் 0.16 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் கல்விக் கட்டணத்துக்கான அந்நியச் செலாவணிச் செலவு 2023-24 இல் 3.4 பில்லியன் டாலராக உயர்ந்தது. அதிக அளவில் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி பெறுகிறார்கள் என்று மகிழ்ச்சி அடைவதா? இல்லை, அவர்களுக்கான உயர் கல்வியை நம்மால் வழங்க முடியவில்லையே என்று வேதனைப்படுவதா?

அதிக அளவில் மாணவர்கள் உயர் கல்விக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மிக முக்கியமான காரணம், பேராசிரியர்கள் பற்றாக்குறை. இந்தியாவில் உள்ள 23 இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) 4,804 பேராசிரியர்கள் பணியிடங்கள், அதாவது 38.4% நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஏனைய உயர் கல்வி நிலையங்களுக்கும் இது பொருந்தும்.

கரக்பூர் ஐஐடியில் பாதிக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றால், இந்தியாவிலேயே சிறந்த ஐஐடி என்று தர நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் தில்லி ஐஐடியில் 39% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பேராசிரியர்கள் இல்லாத உயர் கல்வி நிறுவனங்களில், புத்திசாலி மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு எப்படி விடை கிடைக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

தரமான பேராசிரியர்கள் கிடைக்கவில்லை என்பதும் பெரும்பாலான விண்ணப்பதாரர்களிடம் தரமான ஆராய்ச்சித் தகுதி (பிஎச்டி) இல்லை என்பதும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்குச் சரியான காரணங்களாகத் தெரியவில்லை. நிரந்தரப் பேராசிரியர்கள் இல்லாததால் இடைக்காலப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களை ஏன் நிரந்தரப்படுத்தக் கூடாது? அந்தந்த உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் முன்னாள் மாணவர்கள் ஏன் தாங்கள் பயின்ற நிறுவனத்தில் பேராசிரியர்களாவதை விரும்பவில்லை? நமது உயர் கல்விக் கட்டமைப்பில் ஏதோ தவறு இருக்கிறது. உயர் கல்விக்குத் தகுதியான மாணவர்களை உருவாக்காமல் இருப்பது நமது கல்வி அமைப்பின் குறைபாடு. இதற்கு விடை காணாமல் இந்தியா வளர்ச்சியடைந்த பாரதமாக உயரவே முடியாது!

*****

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.

காலந்தாழ்த்திச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும்: காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது.

திருக்குறள் (எண் 672) அதிகாரம்: வினைசெயல்வகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments