உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது: அமைச்சர் பெ.விஸ்வநாதன்
'தினமணி'யின் மாணவர் மலர் அறிமுக - வெளியீட்டு விழா பற்றி...
"தமிழக உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது. முறைகேடுகளை யார் செய்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம்' எனத் துறையின் அமைச்சர் பெ.விஸ்வநாதன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் "தினமணி மாணவர் மலர் 2026' அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அசோக்குமார் முந்த்ரா தலைமை வகித்தார். தினமணியின் 29-ஆவது ஆண்டு "மாணவர் மலரை' சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் வெளியிட, அதை "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' தலைவரும் மேலாண் இயக்குநருமான மனோஜ்குமார் சொந்தாலியா பெற்றுக் கொண்டார். தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் மாணவர் மலர் குறித்து அறிமுக உரையாற்றினார்.
விழாவில் அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேசியதாவது: தமிழக அமைச்சரவையில் நான் பொறுப்பேற்ற உயர் கல்வித் துறையானது காமராஜர், கக்கன் காலத்து துறை போன்றது. உயர் கல்வித் துறையில் லஞ்சம், ஊழல் இருக்காது. முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசை நடத்த தீர்மானித்துள்ளோம். அதேவேளையில் முறைகேடுகளை யார் செய்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம்.
Advertisement
Advertisement
இதுபோன்ற ஆட்சியைத்தான் இளைஞர்களும் விரும்புகிறார்கள். அதனால்தான் இந்த அரசு அமைந்திருக்கிறது.
தமிழக அமைச்சரவையில் ஒரு சில முக்கியமான முடிவுகளை எடுக்கவுள்ளோம். சில கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரின் முன்னேற்றத்துக்கும் கல்வி மிக முக்கியம். மக்களவையில் நான் முதல் முறையாகப் பேசியபோது, "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்; கல்வி கொடுத்தோர் கடவுளுக்குச் சமமானவர்' எனப் பேசினேன். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவையில் இல்லாத நிலையிலும் நான் பேசியதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார். அந்த உரை சிறப்பாக இருந்ததாக பாராட்டுத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அழைப்பு: நான் குடிசையில் இருந்து வந்தவன். தினமும் நான் படித்த புத்தகங்கள், வாசித்த பத்திரிகைகள், கற்றுக் கொண்ட ஒழுக்கம் மிகுந்த கல்வி ஆகியவையே என்னை உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கின்றன. மாணவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தலைமைச் செயலகத்தில் உள்ள எனது அறைக்கு வரலாம்.
நாம் சேர்த்து வைக்கும் பணம், சொத்துகள், தங்கம் என அனைத்துமே ஒருநாள் அழியலாம். ஆனால், கல்வி ஒருபோதும் அழியாது; அது நிலையான செல்வம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். கல்வி ஒரு பெட்டகம். அதிலிருந்து எவ்வளவு எடுத்தாலும் அதன் அளவு சிறிதும் குறையாது. அத்தகைய சிறப்பு மிகுந்த கல்வியைப் பாதுகாக்க வேண்டும்.
கவனச் சிதறல் கூடாது: கேட்டல், படித்தல், கவனித்தல் ஆகியவற்றின் மூலம் கல்வி மேம்படும். ஆனால், இன்றைய சூழலில் கைப்பேசியில் சமூக ஊடகங்களை மிகுதியாகப் பயன்படுத்துவதன் மூலம் அதிகமானோருக்கு கவனச் சிதறல் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபட வேண்டும். ஒரு வகுப்பறையில் உள்ள நான்கு சுவர்களுக்குள்தான் ஒரு நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுவதாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
தனித்துவமானது தினமணி: தமிழகத்தில் பல்வேறு நாளிதழ்கள் வெளியாகின்றன. ஆனால், அவற்றில் தனித்துவம், அறிவாற்றல், தொலைநோக்குப் பார்வை கொண்ட நாளிதழாக, நமது வாழ்வுக்கான சிறந்த பாதையை அமைத்துக் கொடுக்கும் நாளிதழாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தினமணி திகழ்கிறது.
92 ஆண்டுகளைக் கடந்த இந்த நாளிதழ் நூறாண்டுகளைக் கடந்து மிகப் பெரிய வெற்றி விழா கொண்டாட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யும், உயர் கல்வித் துறை அமைச்சரான நானும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளிதழ் படிக்கும் பழக்கம் இதுவரை இல்லாவிட்டாலும் இனியாவது அந்தப் பழக்கத்தை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் எஸ்.சந்தோஷ் பாபு வரவேற்றார். "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' தலைமைச் செயல் அதிகாரி லக்ஷ்மி மேனன் நன்றி தெரிவித்தார். பேராசிரியர் கிருங்கை சேதுபதி விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலர் சிரஞ்சீவி, சென்னை மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.தமிழ்ச்செல்வன், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.
உயர் கல்விக்கான வாய்ப்புகளை அள்ளித் தரும் பொக்கிஷம் மாணவர் மலர்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
உயர் கல்வியில் உள்ள படிப்புகள், கல்விக் கடன், தொழில்முனைவு உள்பட பல்வேறு வாய்ப்புகளை அள்ளித் தரும் பொக்கிஷமாக தினமணியின் மாணவர் மலர் திகழ்கிறது என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.
தினமணி மாணவர் மலர் அறிமுக விழாவில் மலரை அறிமுகம் செய்து தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது: தினமணி சார்பில் வெளியிடப்படும் இந்த மாணவர் மலர் என்ன காரணத்துக்காக கொண்டுவரப்படுகிறதோ அந்தக் காரணத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் அமைச்சர் பெ.விஸ்வநாதன். ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பு, முயற்சி, படிப்பு ஆகியவற்றால் உன்னதமான பதவிகளையும் எட்ட முடியும் என்பதற்கு அவர் உதாரணமாகத் திகழ்கிறார்.
மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு முடித்ததும் அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பில் இருக்கும்போது, அவர்கள் படிப்பதற்கு என்னென்ன பாடங்கள் இருக்கின்றன, எந்தெந்தக் கல்லூரிகள் இருக்கின்றன, எதைப் படித்தால் என்னென்ன வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன, படிப்புகளுக்கான உதவித் தொகைகள் என பல விஷயங்களையும் ஒருங்கிணைத்து ஓரிடத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மாணவர் மலர் வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு ஒரு கையேடாகவும், எப்போதும் பாதுகாத்து வைக்கும் ஒரு பொக்கிஷமாகவும் இந்த மாணவர் மலர் இருக்கும்.
இந்த மலர் மூன்று தலைமுறைகளைக் கடந்திருக்கிறது. காலம்தோறும் அந்தந்தக் காலத்துக்கேற்ப கல்வித் துறைகளில் ஏற்படும் புதிய மாற்றங்களையும், எந்தத் துறையில் ஈடுபடுவது என்ற ஆலோசனைகளையும் சிறந்த கல்வியாளர்களின் பங்களிப்புடன் இந்த மாணவர் மலர் மூலமாக வழங்கி வருகிறோம். முதலில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதை பிற படிப்புகளைப் படிப்பவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்களுக்கு உங்களுக்கான வழிகாட்டுதல்களைப் பெறுவதோடு, பிறருக்கும் வழிகாட்ட முடியும் என்றார் அவர்.
கல்லூரிச் செயலர் அசோக் குமார் முந்த்ரா: மாணவர்கள் கல்லூரிக் கல்வியுடன் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இணையத்தில் அதிக நேரத்தைச் செலவிடுவதைக் குறைத்துக் கொண்டு இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.
கல்லூரி முதல்வர் எஸ்.சந்தோஷ் பாபு: பள்ளிப் படிப்புக்குப் பிறகு உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தினமணியின் மாணவர் மலர் வழிகாட்டுகிறது. இதை மாணவர்கள் வாங்கிப் படிப்பதுடன் அதில் உள்ள விஷயங்களை தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கும் பகிர வேண்டும்.
Dinamani ‘Maanavar Malar' Released by TN Higher Education Minister P. Viswanathan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.