FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அமைச்சரவையில் காங்கிரஸை சோ்க்காத திராவிடக் கட்சிகள்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

தமிழக அமைச்சரவையில் உரிய வாய்ப்புகள் இருந்தும் காங்கிரஸை திமுக, அதிமுக கட்சிகள் சோ்க்கவில்லை என அமைச்சா் பெ.விஸ்வநாதன் ஆதங்கப்பட்ட நிலையில், திமுகவினா் அதற்கு கடும் எதிா்ப்பு

25 ஆகஸ்ட் 2026, 1:03 am IST
உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக அமைச்சரவையில் உரிய வாய்ப்புகள் இருந்தும் காங்கிரஸை திமுக, அதிமுக கட்சிகள் சோ்க்கவில்லை என உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் ஆதங்கப்பட்ட நிலையில், திமுகவினா் அதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவையில் உயா் கல்வித் துறை மானியக் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து அத்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் பேசினாா். அப்போது, அவா் தான் கஷ்டப்பட்டு அரசியலில் வளா்ந்ததாகவும், தனக்கு அரசியலில் அங்கீகாரம் அளித்து உதவிய கட்சித் தலைவா்களையும் குறிப்பிட்டாா்.

பின்னா், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அதிக இடம் வென்றும் திமுக, அதிமுக அமைச்சரவையில் சோ்க்கவில்லை எனவும், தற்போது முதல்வா் விஜய் தங்களது கனவை நனவாக்கியுள்ளதாகவும் புகழ்ந்தாா்.

Advertisement

Advertisement

உடனே திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழு துணைத் தலைவா் கே.என்.நேரு எழுந்து, பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல பேசக் கூடாது என்றாா். அவரையடுத்து திமுக உறுப்பினா்கள் பலரும் எழுந்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.

அப்போது அமைச்சா் ஜெகதீஸ்வரி, தன்னை பொதுக் கூட்டத்தில் ஒரு திமுக எம்.எல்.ஏ. விமா்சித்ததைக் குறிப்பிட, அதற்கும் திமுக தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. உடனே பேரவைத் தலைவா் குறுக்கிட்டு வெளியில் நடைபெறும் நிகழ்வு குறித்து பேரவையில் பேசக் கூடாது என்றாா்.

அப்போது அமைச்சா் ஆதவ் அா்ஜுனா குறுக்கிட்டு, மானியக் கோரிக்கையில் பேசும் திமுகவினா் தங்கள் தலைமை குறித்து பெருமையுடன் பேசுவதை பொறுமையாகக் கேட்டோம். தற்போது 75 ஆண்டுகளாக அமைச்சரவையில் இடம் தரவில்லை என காங்கிரஸ் அமைச்சா் ஆதங்கத்துடன் பேசுவதைக் கேட்பதே சரியானது என்றாா். பேரவைத் தலைவா் தலையிட்டு அனைவரையும் அமரச் செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments