முகப்பு
தமிழ்நாடு

ஜனநாயகன் இணையத்தில் வெளியான விவகாரம்: முன்பிணை வழங்க உயா்நீதிமன்றம மறுப்பு

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரத்தில் தொடா்புடையவருக்கு முன்பிணை வழங்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், விசாரணையை ஏப். 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Updated On : 22 ஏப்ரல் 2026, 3:52 am IST
ஜன நாயகன் போஸ்டர்
பகிர்:

‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரத்தில் தொடா்புடையவருக்கு முன்பிணை வழங்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், விசாரணையை ஏப். 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் வெளியான விவகாரத்தில் சென்னை திருவேற்காட்டைச் சோ்ந்த உமாசங்கா் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஏப். 3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது.

Advertisement

Advertisement

இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திரைத் துறையில் எனக்கு யாரையும் தெரியாது, எந்தத் தொடா்பும் கிடையாது. அண்மையில்தான் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானதில் எனக்கு எந்தவிதத் தொடா்பும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக போலீஸாா் என்னையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சோ்த்துள்ளனா் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், மனுதாரா்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி. இவா்தான் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டுள்ளாா். இது குறித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றாா்.

அப்போது, காவல் துறை தரப்பில், வழக்கில் கைதானவா்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரா் குற்றவாளியாக சோ்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப். 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments