முகப்பு
தமிழ்நாடு

அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

3 மணி நேரம் மலை மீது ஏறி 9 தேர்தல் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்ட வருசநாடு வாக்குச்சாவடியில் 80 சதவிகித வாக்குப்பதிவு

Updated On : 24 ஏப்ரல், 2026 at 2:05 PM
வருசநாடு வாக்குச்சாவடி - PTI
பகிர்:

தேனி: மிகக் குறைந்த வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட தேனி மாவட்டம் வருசநாடு வாக்குச்சாவடியில் மொத்தமுள்ள 5 வாக்காளர்களில் 4 பேர் நேற்று வாக்களித்துள்ளனர்.

அந்த வாக்குச்சாவடியின் வாக்கு சதவிகிதம் 80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வாக்காளர்களுக்காக 9 தேர்தல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று ஒரே நேரத்தில் நான்கு பேர் வந்து வாக்களித்துச் சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு வாக்குச்சாவடியில் 5 வாக்காளர்களுக்காக 9 தேர்தல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

Advertisement

ஐந்து மாநில பேரவைத் தேர்தலில், மிகவும் சிரமப்பட்டு அடைய வேண்டிய வாக்குச்சாவடிகளை வரிசைப்படுத்தியிருந்த தேர்தல் ஆணையத்தின் பட்டியலில், தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு வாக்குச்சாவடியும் ஒன்று.

இங்குள்ள வாக்குச்சாவடியை தேர்தல் அதிகாரிகள் அடைய சாலை வசதி இல்லாததால், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் இது தேர்தல்தோறும் அதிக கவனம் பெறும் வாக்குச்சாவடியாக தொடர்கிறது.

வழக்கம் போல, வெள்ளிமலை தோட்டத்தில், வருசநாடு மலைப் பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள துரைசாமி மரகதம் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், மாநிலத்தின் 245வது வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

இந்த வாக்குச்சாவடியானது, ஆண்டிப்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது. மேற்கு மலைத் தொடர்ச்சியின் பசுமையான எழில் சூழ்ந்த பகுதியில் ஏலக்காய் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் இங்கு வாழ்கிறார்கள். தற்போது, இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களாக 3 ஆண்கள், 2 பெண்கள் என ஐந்து பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் கால்நடைகள் மூலமாக மலை மீது கொண்டு செல்லப்பட்டது. மிக அடர்ந்த வனப்பகுதி வழியாக மலையேறித்தான் அதிகாரிகள் வாக்குச்சாவடியை அடைந்தனர்.

ஆண்டிப்பட்டியிலிருந்து வெள்ளிமலைக்கு 3 மணி நேரம் மலைப்பாதை வழியாக அதுவும் கரடுமுரடான பாறைகள் செங்குத்தான பாதை என தேர்தல் அதிகாரிகளுக்கும் கடும் சவாலாகவே இருந்தது. வாகனங்கள் செல்ல முடியாததால், கால்நடைகள் மீது ஏற்றி வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும்.

இந்த வாக்குச்சாவடிக்கு என சில குறிப்பிட்ட அதிகாரிகளைத்தான் மாவட்ட அரசு அதிகாரிகள் நியமிப்பார்கள். இந்தப் பாதையில் நன்கு பழக்கப்பட்ட அதிகாரிகளை அனுப்பினால் மட்டுமே வாக்குச்சாவடிக்கு விரைவாக செல்ல முடியும், வாக்குப்பதிவும் சுமூகமாக நடந்து முடியும் என்பதால் குறிப்பிட்ட ஊழியர்களே நியமிக்கப்படுவர்.

தேர்தல் அதிகாரிகள் மட்டுமல்ல, வாக்காளர்களும்கூட, அவர்கள் வாழும் பகுதியிலிருந்து, இந்த வாக்குச்சாவடியை மோசமான மலைப் பாதையைக் கடந்துவந்துதான், தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பது அடுத்த சிக்கல்.

தரையிலிருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்திருக்கும் முக்கிய வாக்குச்சாவடிகளில் இதுவும் ஒன்று. கடந்த 2021ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது இங்கிருந்த 17 வாக்காளர்களில் 14 பேர் வாக்களித்து 82.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. ஆனால், கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது இங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்தது. அதில் 4 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். இது 66.6 சதவிகித வாக்குப்பதிவு என்று அறிவிக்கப்பட்டது.

2026 தேர்தலில் வெறும் 5 வாக்காளர்கள் மட்டுமே இருந்த நிலையில், 4 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவிகிதம் 80 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

80 percent turnout at Varusanadu polling station, where 9 election workers were deployed after climbing a mountain for 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.