தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவு
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்துள்ளது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு...
தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என்பதே இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
2024-2025 ஆம் நிதியாண்டில் 11.29 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 2025-2026 ஆம் நிதியாண்டில் இரட்டை இலக்கத்தில் 10.83 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள மாநிலமான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 - 2025 ஆம் நிதியாண்டில் ரூ. 31.19 லட்சம் கோடியில் இருந்து 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.35.29 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கெனவே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!
திராவிட மாடல் தனித்துவமான மாடல்! சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!
முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.
சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! இது தொடக்கம்தான்.
உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!
நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.