தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது தொடர்பாக...
மே நாள் மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாளை (ஏப். 30) (வியாழக்கிழமை) மே நாள் (வெள்ளிக்கிழமை) மே 2 (சனிக்கிழமை) மற்றும் மே 3 (ஞாயிற்றுக்கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏப். 30, மே, 1,2 ஆகிய நாள்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப். 30 வியாழக்கிழமை அன்று 475 பேருந்துகளும், மே 1 வெள்ளிக்கிழமை மற்றும் மே 2 சனிக்கிழமை 315 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஏப். 30 அன்று 85 பேருந்துகளும், மே 1, 2 தேதிகளில் தலா 75 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து ஏப். 30 முதல் மே 2 ஆம் தேதி வரை தலா 14 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் மே 3 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 615 சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.