குரூப்-2, 2ஏ தேர்வில் குளறுபடி! தமிழ்நாடு முழுவதும் முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைப்பு!!
குரூப்-2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
குரூப்-2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் முதன்மைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் தள்ளிவைக்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்தத் தேர்வை 4,20,217 பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவு கடந்த டிசம்பரில் வெளியானதைத் தொடர்ந்து குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றனர்.
Advertisement
Advertisement
இன்று காலையில் குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெறவிருந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வுகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்தனம், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட 7 தேர்வு மையங்களில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் 600 பேர் தேர்வெழுத வந்த நிலையில் 200 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு நுழைவுச்சீட்டில் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என இருந்தும் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடு செய்யப்படவில்லை.
மேலும், அரும்பாக்கம் உள்ளிட்ட தேர்வு மையங்களில் தேர்வர்களின் தேர்வு எண்கள் இல்லை, இதனால், அங்கு பல்வேறு குளறுபடிகளால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதன்மைத் தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகவும், நந்தனம் அரசு கல்லூரி தேர்வு மையத்திற்கு வினாத்தாளே வரவில்லை என புகார் எழுந்ததைத் தொடர்ந்து முதலில் சென்னையில் உள்ள 7 மையங்களில் தேர்வுகள் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தமிழகம் முழுவதும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அதிகாரபூர்வ தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வாணைய தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார்.
Due to irregularities in the Group-2 and 2A examinations, the main examinations are being postponed across Tamil Nadu, it was announced on Sunday (Feb. 8).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.