தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!
தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம் பேசியதாகக் கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏவிடம் ரூ. 35 கோடி வரை பேரம் பேசிய புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும், திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் சிலர் பேரம் பேசியுள்ளனர்.
இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜை சில நாள்களுக்கு முன்பு சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
Advertisement
Advertisement
அந்த மனுவில் சிலர் தன்னை ரகசியமாக தொடர்பு கொண்டு திமுகவுக்கு மாறும்படியும், திமுகவுக்கு மாறினால் ரூ.35 கோடி தருவதாக கூறி அழைப்பதாகவும், தற்போது கட்சி மாறும்படி மிரட்டல் கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
தன்னை பணத்தாசை காட்டியும், மிரட்டியும் கட்சி மாற தூண்டும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த மனுவில் இளையராஜா தெரிவித்து இருந்தார்.
அந்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி திருவல்லிக்கேணி போலீஸாருக்கு சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். ஆணையரில் உத்தரவின் அடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு என்பவரை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் முன்னாள் திமுக அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், அவரது நண்பர்கள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனடிப்படையில், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கரூர் ஈரோடு சாலையில் உள்ள கோதை நகரைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரான அதிபன் ரமேஷ் மற்றும் ஈரோடு சாலையில் சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வரும் கார்த்திக் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் புதன்கிழமை காலை விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றனர். இருவரிடமும் திருவல்லிக்கேணி போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான இளையராஜாவை சில தினங்களுக்கு முன்பு கைபேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்பவர், தான் ஐபிடிஎஸ் (IPDS) என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன்பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஆனால், தான் வேறு பணியில் இருப்பதாகக் கூறி இளையராஜா தொடர்பை துண்டித்துள்ளார்.
ஆனால், மீண்டும் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு, இளையராஜாவிடம், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த இளையராஜா எனக்கு விருப்பமில்லை; இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் ஜூன் 29 ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் இளையராஜா அளித்த புகாரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம் தனது மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தா முயற்சித்ததோடு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார். அந்தப் புகாரின்பேரில் 11 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சரும். தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு எம்.எல்.ஏவுமான செந்தில்பாலாஜியின் அசோக்குமார், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்ததும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான இளையராஜாவை தொடர்பு கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் இவ்வழக்கில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், திமுகவைச் சேர்ந்தவர்கள் சிலர் 15 முதல் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியுள்ளதாகவும் ஆட்சி அமைப்பதற்கு முன்னதாக, தற்போது அமைச்சராக இருக்கும் கமலி உள்ளிட்டோரிடமும் பேரம் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 35 கோடி முதல் ரூ. 50 கோடி வரை முன்வந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
Three supporters of former Minister Senthil Balaji have been arrested on charges of attempting to strike a deal with a Tamizhaga Vettri Kazhagam MLA.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.