முகப்பு
தமிழ்நாடு

பசு வதைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழ்நாட்டில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வதைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த முழுமையான தடையை நீக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Updated On : 2 ஜூலை 2026, 5:48 am IST
கோப்புப்படம்.
பகிர்:

தமிழ்நாட்டில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வதைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த முழுமையான தடையை நீக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பக்ரீத் பண்டிகையின்போது பொது இடங்களில் மாடுகளை வதைப்பதைத் தடுத்து, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வதைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலர் கே.சூர்யபிரசாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆனால், பொது இடங்களில் மட்டுமன்றி, மாநிலம் முழுவதும் எந்த இடத்திலும், எந்த நாளிலும் பசு மற்றும் கன்று ஆகியவற்றை வதைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மே 27-ஆம் தேதி உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

1958-ஆம் ஆண்டின் தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், தகுந்த சான்றிதழுடன் 10 வயதுக்கு மேற்பட்ட இனப்பெருக்கம் மற்றும் உழைப்புக்குத் தகுதியற்ற பசுக்களை வதைக்க அனுமதிக்கிறது.

எனவே, உயர்நீதிமன்றத்தின் முழுமையான தடை இந்தச் சட்டத்துக்கு முரணாக இருப்பதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறைச் செயலர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:

பொது இடங்களில் பசுக்கள் வதைக்கப்படுவதைத் தடுக்க உத்தரவு கோரி மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுவில், உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட விஷயத்தைத் தாண்டி, "பக்ரீத் பண்டிகையின்போது அல்லது வேறு எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்றுகள் வதைக்கப்படுவதற்கு முழுமையான மற்றும் ஒட்டுமொத்தத் தடை விதித்திருக்க வேண்டுமா என்பதே உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்கு எழும் கேள்வியாகும்.

உயர்நீதிமன்ற உத்தரவில் ஒருபுறம், பத்தி 16-இல், சட்டபூர்வ விதிகளைக் கருத்தில்கொண்டு, "குறிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் எந்த விலங்கையும் வதைக்க அதிகாரிகள் அனுமதிக்க முடியாது' என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் மறுபுறம், பத்தி 17-இல், "பக்ரீத் பண்டிகையின் முந்தைய நாளிலோ அல்லது வேறு எந்த நாளிலோ எந்தப் பசுவோ அல்லது கன்றோ வதைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு' மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வாறு ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவின் மூலம், குறிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில்கூட பசு வதைக்கு ஒரு முழுமையான தடையை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.

இது தமிழகத்தில் விலங்குகளை அறுக்கும் நடைமுறையை நிர்வகிக்கும் சட்டக் கட்டமைப்புக்கு முரணாக உள்ளது. எனவே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு கோரி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments