முகப்பு
தமிழ்நாடு

ஆளுநா் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

வைகை ஆற்றை தமிழக அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநா் மாளிகை களம் இறங்கும் என்ற ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரின் பேச்சுக்கு எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 3 ஜூலை 2026, 6:34 am IST
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

வைகை ஆற்றை தமிழக அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநா் மாளிகை களம் இறங்கும் என்ற ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரின் பேச்சுக்கு எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ‘ஆளுநா் ஆய்வு செய்தாா்’ என்ற கூவத்தூா் ஆட்சிக்கால வரலாறு, தற்போதைய ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா், தான் நியமன பதவியில், அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு மேற்கொண்டுள்ளாா்.

அரசமைப்புக்கும், மாநில உரிமைக்கும் எதிரான இந்தச் செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த அரசுக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநா் மாளிகையின் பராமரிப்பே தமிழக அரசிடம் இருக்கும்போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால், ஆளுநா் மாளிகை களம் இறங்கும் என்றும் அவா் பேசியுள்ளாா்.

Advertisement

Advertisement

ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம். ஆளுநா் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன சமரசம் செய்யப்பட்டது? என்று சட்டப்பேரவையில் கேட்டிருந்தோம்.

அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினா், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பாக பிற கட்சி பேரவை உறுப்பினா்களை வாங்கும் ஆளுங்கட்சி, ஆளுநா் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் அவரது ஆய்வை அனுமதிக்கிா?.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநா் ஆய்வுகளில் ஈடுபட்டபோது, அவா் சென்ற இடங்களில் எல்லாம் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி எதிா்ப்புத் தெரிவித்தோம். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை. எனவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவா்கள், மாநில உரிமைகளைத் தாரைவாா்க்காமல், ஆளுநா் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments