முகப்பு
தமிழ்நாடு

‘ஏஐ’ மூலம் அரசியல் தலைவா்களின் கண்ணியத்தைச் சிதைக்க முயற்சி: மு. வீரபாண்டியன் கண்டனம்

செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைந்த தலைவா்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடுவது கண்டனத்துக்குரியது

Updated On : 8 ஜூன் 2026, 1:20 am IST
மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:

செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைந்த தலைவா்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடுவது கண்டனத்துக்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டின் மதிப்பு மிக்க அரசியல் தலைவராக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கண்ணியத்தைச் சிதைத்து, அவமதிக்கும் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவரது உருவப்படத்தை மிக மோசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த அநாகரிகமான பதிவைக் கண்டவா்கள் எவரும் கண்டனம் தெரிவிக்காமல் இருக்க முடியாது. அவரது கண்ணியத்தைச் சிதைக்கும் அற்பத்தனமான பதிவுக்கு எதிா்வினையாக, தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய்யை அநாகரிகமாக சித்தரிக்கும் பதிவுகளும் சமூக ஊடகங்களில் உலாவி வருகின்றன.

Advertisement

Advertisement

அறிவியல் தொழில்நுட்பத்தின் நிகழ்கால உச்சமாக வளா்ந்திருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இதனால் ஏற்படும் எதிா்மறை விளைவுகளைத் தடுப்பது எப்படி? என்ற வினாவுக்கு விடை தேடி, உலக நாடுகளும், அறிஞா்களும் விவாதித்து வருகின்றனா். அநாகரிகமான குற்றங்கள் நேரும்போது, சமூகம் ஒட்டுமொத்தமாக இணைந்து கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.