முகப்பு
தமிழ்நாடு

மின்கட்டமைப்பை மேம்படுத்த ஐஐடி நிபுணா்களுடன் அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் ஆலோசனை

தமிழகத்தில் மின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சிறப்பாகப் பயன்படுத்தவும் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் சென்னை ஐஐடி நிபுணா்களுடன் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூன் 2026, 1:44 am IST
அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் - கோப்புப்படம்.
பகிர்:

தமிழகத்தில் மின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சிறப்பாகப் பயன்படுத்தவும் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் சென்னை ஐஐடி நிபுணா்களுடன் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சென்னை ஐஐடி எரிசக்தித் துறை நிபுணா்கள், மின்வாரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவினா் மற்றும் உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதில், தமிழகத்தில் அதிகரித்து வரும் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியை, மின் விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எவ்வாறு இணைத்து செயல்படுத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், மின் தேவை மற்றும் மின் உற்பத்தியை சமநிலைப்படுத்துவது, மின் வலையமைப்பை சீராக பராமரிப்பது, அனல் மின் நிலையங்களைத் தேவைக்கு ஏற்ப இயக்குவது மற்றும் மின் உற்பத்தியை துல்லியமாக முன்கூட்டியே கணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திரக் கற்றல், தரவு பகுப்பாய்வு, பேட்டரி மூலம் மின் சேமிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பசுமை ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன. மேலும், மின்வாரிய வளா்ச்சிக்காக புதிய மற்றும் நம்பகமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன்தொடா்ச்சியாக, மின்வாரிய ஆராய்ச்சி குழு மற்றும் ஐஐடி நிபுணா்கள் இணைந்து செயல்படும் ஒருங்கிணைந்த குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இணை மேலாண்மை இயக்குநா் (நிதி) ஐ.சா.மொ்சி ரம்யா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலா் அனில் மேஷ்ராம், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்த ராவ், பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் பி.என். ஸ்ரீதா் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஐஐடி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.