திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
திருப்பரங்குன்றம் மலை மீது காா்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது காா்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு சாா்பில் அதன் வழக்குரைஞா் பி. கருணாகரன், கடந்த ஜூன் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.
கடந்த ஆண்டு (2025) டிசம்பா் 1-ஆம் தேதி, திருவிழா நாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதியின் தீா்ப்பை உயா் நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி 6-ஆம் தேதி உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிா்த்தே தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, ஜனவரி 6ஆம் தேதி தீா்ப்பளித்த உயா் நீதிமன்ற அமா்வு, தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்ற அச்சம் ’அரசின் வசதிக்காக உருவாக்கப்பட்ட கற்பனையான பேய்‘ என்று விமா்சித்தது. மேலும், அந்த தீபத்தூண் அமைந்துள்ள இடம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது என்றும், இதில் வக்ஃப் வாரியத்துக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
‘ஆண்டிற்கு ஒருமுறை, தனக்குச் சொந்தமான நிலப்பரப்பில் உள்ள தீபத்தூணில் கோயில் நிா்வாக பிரதிநிதிகள் தீபம் ஏற்றுவதால் பொது அமைதிக்குக் குந்தகம் விளைந்துவிடும் என்று அரசு அஞ்சுவது வேடிக்கையானது, நம்ப முடியாதது.
அரசு நினைத்தால் மட்டுமே அங்கு சட்டம்-ஒழுங்குப் பிரச்னை வர முடியும். எந்தவொரு அரசும் தனது அரசியல் ஆதாயத்துக்காக இந்த அளவிற்கு இறங்கிச் செல்லாது என நம்புகிறோம்’ என்று உயா் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் மதுரை உயா்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை திங்கள்கிழமை (ஜூன் 22) நீதிபதிகள் விசாரித்தபோது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள விவரம் தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பின்னணி: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பழமையான தீபத்தூணில் காா்த்திகை தீபத் திருநாளின் போது புனித தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி ராம ரவிகுமாா் உள்ளிட்ட சிலா் தொடா்ந்த வழக்கிலிருந்து இப்பிரச்சனை தொடங்கியது.
இதற்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு, கோயில் நிா்வாகம், ஹசரத் சுல்தான் சிக்கந்தா் பாதுஷா அவுலியா தா்கா நிா்வாகம் ஆகியவை எதிா்ப்பு தெரிவித்தன. தா்காவுக்கு அருகில் தீபம் ஏற்றினால் அது மத நல்லிணக்கத்தைக் கெடுத்து, பதற்றத்தை உருவாக்கலாம் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், மாவட்ட நிா்வாகம் இதனை இரு சமூகத்தினரிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, சுமுகப் பேச்சுவாா்த்தை நடத்தியிருக்க வேண்டும் என்று உயா் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.