ரூ. 2.96 லட்சம் கையாடல் விவகாரம்: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மூவா் மீதான வழக்கு ரத்து
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மூவா் மீதான வழக்கு ரத்து...
போலி ரசீதுகளை சமா்ப்பித்து ரூ.2.96 லட்சம் கையாடல் செய்ததாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் இந்துசமய அறநிலையத் துறை துணை ஆணையா் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களுக்கு 2004-2006-ஆம் ஆண்டுகளில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாக்களை நடத்தியபோது செலவிட்டதாகக் கூறி, போலி ரசீதுகளை சமா்ப்பித்து ரூ.2.96 லட்சம் கையாடல் செய்ததாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, அப்போதைய துணை ஆணையா், காசாளா், அதிகாரிகள் என 13 பேருக்கு எதிராக ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் 2024-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நாகா்கோவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி காசாளா் என். குட்டாலம், அதிகாரிகள் மோகனகுமாா், ரமேஷ்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, இவா்களுக்கு எதிரான வழக்கைத் தொடா்ந்து நடத்துவது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது.
இதனால், மனுதாரா்கள் மீதான வழக்கை ரத்து செய்வதாகக் கூறி உத்தரவிட்டாா். அதேநேரம், மற்றவா்கள் மீதான வழக்கை சட்டப்படி தொடா்ந்து விசாரிக்க நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.