நிலக்கரி இறக்குமதி முறைகேடு: நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்ததாக நான்கு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிலக்கரி இறக்குமதியில் 487 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக தொழிலதிபர் அகமது புஹாரிக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கில் தொடர்புடைய நான்கு நிறுவனங்களுக்கு எதிரான வழக்கையும் ரத்து செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு 487 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புஹாரி, அந்த நிறுவனம், கோஸ்டல் எனர்ஜென், துபையில் உள்ள நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், மொரீஷியாசில் உள்ள முத்தியாரா எனர்ஜி ஹோல்டிங்ஸ், பிரிசியஸ் எனர்ஜி ஹோல்டிங் என்ற அயல்நாட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அகமது புஹாரிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் 2025ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
Advertisement
Advertisement
அதனடிப்படையில், அகமது புஹாரி மற்றும் 2 நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த சூழலில், 4 நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. ஓம் பிரகாஷ், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை தில்லி உயர் நீதிமன்றமும், அமலாக்கத் துறை வழக்கை சென்னை உயர் நீதிமன்றமும் ரத்து செய்துள்ளதால், இந்த நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.
The Chennai Special CBI Court has delivered its verdict in the case filed against four companies over alleged irregularities in coal imports.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.