சென்னையில் பிரீமியம் பேருந்து சேவை! எந்தெந்த வழித்தடம்? முழு விவரம்..!
சென்னையில் பிரீமியம் பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டிருப்பது பற்றி...
சென்னையில் பிரீமியம் பேருந்து சேவையை மாநகரப் போக்குவரத்துக் கழகம் புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
சென்னை மாநகரப் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தாழ்தளப் பேருந்துகள், தாழ்தள குளிர்சாதனப் பேருந்துகள், மின்சாரப் பேருந்துகள், ஆன்லைன் பரிவர்த்தனை உள்பட பல்வேறு மாற்றங்களை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) அறிமுகம் செய்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக பிரீமியம் பேருந்து போக்குவரத்து சேவையை எம்டிசி இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த பேருந்து சேவைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
Advertisement
Advertisement
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் சென்னை ஒன் செயலி மூலம் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டு, அதனடிப்படையில் பிரீமியம் சேவையை அறிமுகம் செய்துள்ளதாக எம்டிசி தெரிவித்துள்ளது.
தில்லி, மும்பை போன்ற நகரங்களைத் தொடர்ந்து சென்னையிலும் அரசின் போக்குவரத்துக் கழகம் சார்பில் முதல்முறையாக பிரீமியம் பேருந்து சேவை (தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்து) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உயர்தர வசதிகள், சொகுசு இருக்கைகள், இலவச இணைய சேவை, நவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த வகையில் பிரீமியம் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நடத்துநர் இல்லாத பேருந்துகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பேருந்தில் பயணிக்க சென்னை ஒன் செயலி மூலம் மட்டுமே இருக்கையை முன்பதிவு செய்ய முடியும்.
சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக இருக்கைகள் இடம்பெற்றுள்ளன.
முதல்கட்டமாக கோயம்பேடு - சிறுசேரி ஐடி பூங்கா இடையே இயக்கப்படும் 570 எஸ் மற்றும் கிளாம்பாக்கம் முதல் திருவான்மியூர் இடையே இயக்கப்படும் 91 ஆகிய இரு வழித்தடங்களில் முன்னோட்டமாக இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்தில் பயணம் செய்ய அடிப்படை கட்டணமாக ரூ. 50 மற்றும் அதிகபட்ச கட்டணமாக ரூ. 150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் வரவேற்பை பொருத்து நகரின் பிற பகுதிகளுக்கும் இந்த பேருந்து சேவை அறிமுகம் செய்யப்படும் என்று எம்டிசி தெரிவித்துள்ளது.
MTC Premium bus service in Chennai! Which routes? Full details..!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.