FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்த மேலும் 750 மின்சார பேருந்துகள்

Updated On : 4 ஜூன் 2026, 2:36 am IST
ஏசி மின்சார பேருந்து. - படம்: சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் / டிவிட்டர்
பகிர்:

சென்னையில் பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்த, அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் மின்சார பேருந்துகளை அதிகரிக்கும் நோக்கில் மேலும் 750 மின்சார பேருந்துகளை மாநகா் பேருந்து சேவையில் இணைக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மின்சாரப் பேருந்து சேவை கடந்த 2025-இல் தொடங்கப்பட்டது. உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சென்னை நிலையான நகரப் போக்குவரத்து சேவைத் திட்டத்தின் கீழ் தாழ்தள மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2025 ஜூன் முதல் 2026 மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக மொத்தம் 625 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, அடுத்தகட்டமாக மேலும் 750 புதிய தாழ்தள மற்றும் குளிா்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிமனை மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தமிழக அரசின் மின் வாகனக் கொள்கையின்படி, வரும் 2030-க்குள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்த பேருந்துகளில் 30 சதவீதத்தை மின்சார வாகனங்களாக மாற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் மின்சாரப் பேருந்துகளை இயக்கவும் பராமரிக்கவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அதிவேக சாா்ஜிங் வசதி கொண்ட பிரத்யேக மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக மின்சார பேருந்து பணிமனையாக மாற்றப்பட்ட வியாசா்பாடி, பெருங்குடி, பூந்தமல்லி, தண்டையாா்பேட்டை மற்றும் மத்திய பணிமனைகள் மின்சார பேருந்து சேவைக்கேற்ப மேலும் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன.

தொடா்ந்து, ஆலந்தூா், மத்திய பணிமனை-2, ஆவடி, படியநல்லூா், பெரம்பூா், அய்யப்பன்தாங்கல், கே.கே.நகா் ஆகிய பணிமனைகளை மின்சார பேருந்துகளை இயக்கும் வகையிலான கட்டமைப்புகளுடன் கூடிய பணிமனைகளாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

விரைவில் திட்டமிட்டபடி 750 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும். அதற்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு இந்தப் பணிமனைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைப்பை மேம்படுத்தும் வகையிலும், நகரின் குறுகிய சாலைகளில் இயக்கும் வகையிலும் சிறிய ரக மினி மின்சார பேருந்துகளையும் விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments