ஏப். 23-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! மே 4 - வாக்கு எண்ணிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.
இதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
வேட்புமனுத் தாக்கல் - மார்ச் 30
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 6
வேட்புமனு பரிசீலனை - ஏப்ரல் 7
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - ஏப்ரல் 9
வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை - மே 4
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தேர்தல் பணிகளில் 25 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்நாட்டில் மே 10 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், நகர்ப்புரங்களில் 30,967 வாக்குச்சாவடிகள், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தகுதியான வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் செல்போன்கள் பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரங்கள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும்.