தமிழ்நாடு பேரவைத் தேர்தல்: பொன்முடி போட்டியில்லை!
திருக்கோயிலூரில் பொன்முடி போட்டியிடாதது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான க. பொன்முடி (வயது 76) போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த ஒரு வாரமாக நேர்காணல் செய்து வருகிறார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை நேர்காணல் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திருக்கோயிலூர் சட்டப்பேரவை உறுப்பினரான பொன்முடி, நேர்காணலில் பங்கேற்கவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவே தாக்கல் செய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அவரது மகன் கெளதம் சிகாமணி திருக்கோயிலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலில் கலந்துகொண்டார்.
திமுக மூத்த தலைவரான பொன்முடி இதுவரை 6 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்முடி, கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவின் சி.வி. சண்முகத்திடம் தோல்வியைத் தழுவினார்.
பின்னர், 2016 மற்றும் 2021 பேரவைத் தேர்தல்களில் திருக்கோயிலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை, கல்வித் துறை, உயர்க்கல்வித் துறை, வனத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டு, மணல் கொள்ளை மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு தண்டனை விதித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தண்டனைக்கு இடைக்காலத் தடையும் பொன்முடி பெற்றார்.
இதனிடையே, பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் பொன்முடிக்கு எதிரான கண்டனம் வலுத்த நிலையில், 2025 ஆம் ஆண்டு கட்சிப் பொறுப்பில் இருந்தும் பொன்முடி விடுவிக்கப்பட்டார்.
கடந்த 40 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டத்தின் திமுக முகமாக கருதப்பட்ட பொன்முடியின் படங்கள், பெயர்கள் உள்ளிட்டவை பெரும்பாலான மாவட்ட நிகழ்வில்கூட சமீபகாலமாக இடம்பெறவில்லை.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காமல், அவரது தொகுதியில் மகனை களமிறகியுள்ளார் பொன்முடி.
பொன்முடி போட்டியிடாதது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Tamil Nadu Assembly Elections: Ponmudi is not contesting!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.