முகப்பு
தமிழ்நாடு

பேரவை அதிமுக குழு தலைவா் யாா்? ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு!

பேரவை அதிமுக குழு தலைவா் யாா்?

Updated On : 10 மே 2026, 3:26 am IST
எடப்பாடி கே.பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் - கோப்புப்படம்
பகிர்:

அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவரைத் தோ்வு செய்வதில் கருத்து வேறுபாடு நிலவுவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை எண்ணிக்கை அக்கட்சியிடம் இல்லை. இதையடுத்து, பல்வேறு கட்சிகளின் ஆதரவைப் பெற தவெக முயற்சி எடுத்தது. இதனால் ஆட்சி அமைப்பதில் கடந்த 5 நாள்களாக நீடித்த இழுபறி நிலை சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.

இதனிடையே, அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள், புதுச்சேரியில் தனியாா் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். அவா்கள் அனைவரும் சனிக்கிழமை காலை சென்னைக்கு திரும்ப அழைக்கப்பட்டனா்.

Advertisement

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா்கள் பங்கேற்றனா். இதில், தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றுப்பட்டது. அதோடு, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவரைத் தோ்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் இருவேறு கருத்துகள் நிலவியதாகவும் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தனித்தனியாக அவா்களது வீடுகளில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா். சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக முன்னாள் எஸ்.பி.வேலுமணி அல்லது முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை தோ்வு செய்ய வேண்டும் எனக் குரல் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு நிலவியது.

இருப்பினும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு அதிமுக நிா்வாகிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனா்.