முகப்பு
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா? வன்னி அரசு கேள்வி!

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா என விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 10 மே 2026, 8:54 pm IST
வன்னி அரசு - விஜய்
பகிர்:

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா என விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை நேரு அரங்கத்தில் இன்று (மே 10) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடலும் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.

Advertisement

இந்நிலையில், முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் 3வதாக பாடப்பட்டது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த விசிக கட்சியின் எம்.எல்.ஏ.-வான வன்னி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”1891ல் வெளியான மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த" எனும் வரிகளோடு அமைந்த தமிழ்த்தாயைப் போற்றும் பாடலை 1970ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்ததோடு உரிய அரசாணையும் வெளியிட்டது.

அதனைக் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அனைத்து பொது நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிலைய நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் பாடப்பெற்றது.

2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தமிழ்நாட்டின் மாநில பாடலாக அறிவித்தும், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்தி வழிகாட்டுதல்கள் வழங்கியும் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த பின்னணியில் தான் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாட்டின் ஆளுநராக ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபுப்படி கூட்டத்தொடர்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முதலில் பாடப்படுவதை கடுமையாக எதிர்த்தார்.

ஆளுநருக்கு பணியாது, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தமிழ்நாடு அரசு உயர்த்தி பிடித்த காரணத்தையும் முன்வைத்து அவையிலிருந்து வெளியேறும் நாடகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரங்கேற்றி வந்தார்.

தற்போது கேரள ஆளுநராக உள்ள ராஜேந்திர அர்லேகர் என்பவரை தமிழ்நாட்டுக்கும் கூடுதல் பொறுப்பாக ஒன்றிய பாஜக அரசு கடந்த மார்ச் மாதம் நியமித்தது. கையில் மூவர்ண கொடியேந்திய ‘பாரத மாதா’ படத்தை புறந்தள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ். கும்பலால் முன்னிறுத்தப்படும் காவிக்கொடியை ஏந்திய படத்தை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விலும், ஆளுநர் பங்கேற்கும் பல்கலைக்கழகம் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்த தொடங்கினார். கடைந்தெடுத்த சனாதன கருத்துகளை கொண்டிருப்பவர் தான் இந்த ராஜேந்திர அர்லேகர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உரிமைகோரிய தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வின் தொடக்கத்தில் தான் அதில் பங்கேற்றிருந்த எங்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாடுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் அரங்கேறியது.

நிகழ்வின் தொடக்கமாக 'வந்தே மாதரம்' பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலும் பாடப்பட்டது. நிகழ்வின் முடிவிலும் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின் தொடக்கத்தில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் மட்டுமே பாடப்பட்டது. இப்போது புதிதாக 'வந்தே மாதரம்' வந்துள்ளது.

பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்று தொடங்கும் பாடல், அவரது 'ஆனந்தமடம்' எனும் நாவலில் இடம்பெற்றுள்ளது. முழுக்க முழுக்க வங்காளத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை 'தேச பக்தி' என்ற பெயரைப் எழுத்தப்பட்டது தான் இந்த நாவல்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை உணர்வை கடத்தும் கருத்துகளைக் கொண்ட நூலில் இடம்பெற்றுள்ளது தான் 'வந்தே மாதரம்' பாடல். இதற்கு தான் 2025ஆம் ஆண்டு இப்பாடலின் 150வது ஆண்டை கொண்டாடுகிறோம் என்ற பெயரில், இந்திய தேசிய கீதத்துக்கு இணையான சட்டப்பாதுகாப்பை வழங்கியது ஒன்றிய பாஜக அரசு.

ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பலால் கொண்டாடப்படும் இந்த பாடல் தான் இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து பாடப்பட்டுள்ளது. தாய் தமிழுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு தான் ஆளுநர் அர்லேகர் இந்த கொடுங்குற்றத்தை அரங்கேற்றினாரா என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இதனை உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

summary

Insult to the 'Tamil Thai Vazhthu' — Did it unfold with the Chief Minister's full knowledge? Vanni Arasu questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.