பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதில்லை! மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!!
பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மதுப் பிரியர்கள் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதிலிருந்து மதுக்கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வாக்குவதில்லை என்று மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
இந்த 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள், காலி மதுபாட்டில்களை கொடுத்துவிட்டு ரூ.10 திரும்பப் பெறும் திட்டம், இரு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் புதுவரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, பேரவைத் தேர்தல் நடைபெறும்போது கோவையில் உள்ள பெரும்பாலான 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ரூ.10 'ஸ்டிக்கர்' இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, கரூரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தற்போதைய முதல்வரும் தவெக தலைவருமான விஜய், பாட்டிலுக்கு ரூ. 10 வாங்குவதைப் பற்றியும், அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். மேலும், “பாட்டிலுக்கு பத்து ரூபாய்..” என்று பாடலும் பாடி விமர்சித்திருந்தார்.
சமீபத்தில் தமிழக முதல்வராக சி. ஜோசப் விஜய் கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றார். விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் பதவியேற்ற நாளிலிருந்து மதுபாட்டிலுக்கு கூடுதலாக வாங்கப்பட்டு வந்த ரூ. 10 நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ. 10 வாங்குவது நிறுத்தப்பட்டதா? என்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், கூடுதலாக வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Liquor enthusiasts have expressed their delight that, since Joseph Vijay assumed office as the Chief Minister of Tamil Nadu, liquor shops are no longer charging an extra ₹10 per bottle.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.