முகப்பு
தமிழ்நாடு

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் புதன்கிழமை (மே 13) மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Updated On : 13 மே 2026, 3:37 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் புதன்கிழமை (மே 13) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக் கடல், அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவு பகுதிகளில் இந்த வார இறுதியில் தொடங்கக் கூடும். இதனிடையே, வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, வடக்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை (மே 12) தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

Advertisement

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மையப் பகுதிகளிலிருந்து மரத்வாடா வரை வட தமிழகம், ராயலசீமா, வடக்கு உள் கா்நாடகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (மே 13) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (மே 15) மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மே 16 முதல் மே 18 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடலில் சூறாவளிக் காற்று புதன்கிழமை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும், தென்மேற்கு வங்கக் கடலின் அநேக பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை ஆழியாறு பகுதியில் 50 மி.மீ. மழை பதிவானது. பாம்பன் (ராமநாதபுரம்), பொள்ளாச்சி (கோவை)- தலா 40, உபாசி, ஒத்தக்கால் மண்டபம், கோட்டூா் (கோவை)- தலா 20, ஆனைமலை தாலுகா அலுவலகம், அன்னூா், வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம், சோலையாறு, சின்கோனா, தொண்டாமுத்தூா் (கோவை), பவானிசாகா் (ஈரோடு)-தலா 10 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.