நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் விஜய்
நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு தேவையில்லை; அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை நேற்று அறிவித்தது.
இதுதொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தேசிய தேர்வு முகமை மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி 5,432 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் மட்டும் 31 நகரங்களில் இத்தேர்வு நடைபெற்றது. சுமார் 1.4 லட்சம் தமிழக விண்ணப்பதாரர்கள் உட்பட, 22,05,035 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்திய அரசின் ஒப்புதலுடன், தேசிய தேர்வு முகமை தற்போது நடந்து முடிந்த நீட்தேர்வை ரத்து செய்துள்ளது.
மேலும், இவ்விவகாரம் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பான மத்திய குற்றப்புலானய்வுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ரத்து நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு ஆர்வலர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.
நீட் தேர்வின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2024-ஆம் ஆண்டிலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆறு மாநிலங்களில் IR-கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் மத்திய குற்றப்புலானய்வுத்துறைக்கு மாற்றப்பட்டன.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்நிலை நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.
அக்குழு 95 விரிவான சீர்திருத்த பரிந்துரைகளை வழங்கியது. இவை அனைத்தையும் மீறி, இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளதோடு நீட்தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான ஒரு தேர்வில் உள்ள குறைபாடுகளுக்கும். கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்கும் இதுவே உறுதியான சான்றாகும்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே. தமிழ்நாடு அரசு அதனைத் தொடர்ந்து மற்றும் ஒருமித்த குரலில் எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, கிராமப்புறங்கள் அரசுப் பள்ளிகள், தமிழ் வழிப் பயிற்றுமொழிப் பின்னணிகள் மற்றும் சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே. தமிழ் நாடு அரசின் நீண்ட நாள் கோரிக்கையான தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், MBBS, BDS மற்றும் ஆயூஷ் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Chief Minister Vijay has issued a statement asserting that the NEET examination is unnecessary and must be cancelled immediately.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.