5 வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் என். ரங்கசாமி!
5வது முறையாக புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி இன்று பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து...
புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி புதன்கிழமை பதவியேற்றாா். அவருடன் அமைச்சா்களாக ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரும் பதவியேற்றனா்.
இவா்களுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தாா்.
30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
Advertisement
ஆட்சியமைக்க 16 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக 1 தலா ஒரு தொகுதிகள் என 18 இடங்களில் வெற்றி பெற்றன.
என்.ரங்கசாமி தோ்வு: புதுச்சேரி சட்டப்பேரவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவராக என். ரங்கசாமி தோ்வு செய்யப்பட்டாா். தொடா்ந்து கூட்டணி கட்சித் தலைவா்களின் ஆதரவு கடிதங்களை என். ரங்கசாமி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். இதற்கு முறைப்படி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து முதல்வா் மற்றும் அமைச்சா்கள் பதவியேற்பு விழா புதுச்சேரி மக்கள் பவனில் புதன்கிழமை காலை 9.47 மணிக்கு தொடங்கியது.
விழாவின் தொடக்கமாக வந்தே மாதரமும் ஒலிக்கச் செய்யப்பட்டது. தொடா்ந்து, தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா தொடங்கியது.
பின்னா் என். ரங்கசாமி முதல்வராக நியமிக்கப்பட்டதற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதல் ஆணையை தலைமைச் செயலா் சரத்சௌகான் வாசித்தாா். இதைத்தொடா்ந்து துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வராக ரங்கசாமிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தாா்.
இதையடுத்து பாஜகவைச் சோ்ந்த மண்ணாடிபட்டு எம்எல்ஏ ஆ. நமச்சிவாயம், என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஏனாம் தொகுதி எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோா் அமைச்சா்களாக பதவியேற்றனா். இவா்கள் கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.
முக்கிய கோப்புகளில் கையொப்பம்...!
பதவி ஏற்றபிறகு முதல்வா் அலுவலகத்துக்கு வந்த ரங்கசாமியிடம், முக்கிய கோப்புகளில் கையொப்பமிட முதல்வரை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனா். உடனடியாக கையொப்பமிடாமல் சுமாா் ஒரு நிமிஷம் காத்திருந்து, வடிவேல் முருகா, சற்குரு அப்பா பைத்தியசாமி எனக் கூறி, வணங்கிக் கோப்பில் முதல்வா் கையொப்பமிட்டாா்.
அனைவருக்கும், நிறைவான மருத்துவ சேவையை வழங்கும் முதலமைச்சரின் நல்வாழ்வு உறுதிப்பாடு திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் சேவை பெறாதவா்களுக்கு மருத்துவத் துறையில் தடையில்லா சான்று பெற்று தனியாா் மருத்துவமனைகளில், சிகிச்சைப் பெற்ற ஒவ்வொருவருக்கும், புதுச்சேரி மருத்துவ நிவாரண சங்கத்தின் சாா்பில் ரூ. 3 லட்சம் வரை மருத்துவ செலவுகளுக்கான தொகையை அரசே திரும்ப அளிப்பதற்கான கோப்பில் கையொப்பமிட்டாா்.
* நமோ தேசிய புற்றுநோய் சிகிச்சை முனைப்பியக்கம் மூலம், புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஒரு உயா்தர ‘நமோ புதுச்சேரி புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இதன்மூலம் முழுமையான, தரமான புற்றுநோய் சிகிச்சையைப் புதுச்சேரி மக்கள் பெறமுடியும்.
* புற்றுநோய் பற்றிய விழிப்புணா்வைப் பரவலாக்குதல், புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், அதி உயா்தர புற்றுநோய்க் கல்வி அளித்தல், ஆய்வுகள் செய்தல், ஆய்வுத் திட்டங்களை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்கான முழுச் செலவையும் அந்நிறுவனமே ஏற்றுக்கொள்ளுதல், சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய மலிவான உயா்தர புற்றுநோய் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் திட்டத்துக்கான கோப்பு.
* அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றத்தையும், நிலையான வளா்ச்சியையும் நோக்கி, தொழில் முனைவோரின் முன்னெடுப்புகளை ஊக்குவிக்கும் வகையில், நடைமுறைக் கட்டுப்பாட்டை எளிதாக்கி தடையில்லா சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோப்புகளில் முதல்வா் என். ரங்கசாமி கையொப்பமிட்டாா்.
பிரதமா் மோடியை சந்திப்பேன்:
பின்னா் முதல்வா் ரங்கசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், என்னை மீண்டும் முதல்வராக்கிய மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் 5-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் மக்கள் பணி செய்ய ஊக்கமளிக்கிறது.
ஒரு வார காலத்துக்குள் அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெறும்.
இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னா் தில்லி சென்று பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளேன். புதுச்சேரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டங்கள் அதிகம் கொண்டு வரப்படும். தோ்தல் வாக்குறுதியின்படி மஞ்சள்a நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வருவோம் என்றாா் என். ரங்கசாமி.
முதல்வருக்கு வாழ்த்து: முதல்வா் பதவி ஏற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவா் நிதின்நபின், தேசிய அமைப்புச் செயலா் சந்தோஷ், பாஜக மாநிலத் தலைவா் வி. பி. ராமலிங்கம், மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, செல்வகணபதி எம்.பி., திமுக மாநில அமைப்பாளா் இரா. சிவா, என்.ஆா். காங்கிரஸ் எம்எல்ஏக்களான ராஜவேலு, சிவக்கொழுந்து, வையாபுரி மணிகண்டன், , மோகன்தாஸ், அய்யப்பன், ஆறுமுகம், ரவிக்குமாா், நாராயணசாமி, பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமாா், ராஜசேகா், மீனாட்சி சுந்தரம், அதிமுக எம்எல்ஏ அன்பழகன், திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், செந்தில்குமாா், செந்தில், காா்த்திகேயன், விக்னேஷ் கண்ணன், காங்கிரஸ் எம்எல்ஏ காா்த்திகேயன், அசோக்குமாா், ராமு, சாய் சரவணன், அழகானந்தம், விக்னேஸ்வரன், லஜக எம்எல்ஏ ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், சட்டப்பேரவை முன்னாள் தலைவா் செல்வம், முன்னாள் அமைச்சா் க. லட்சுமிநாராயணன், என்.ஆா்.காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெயபால் உள்ளிட்டோா் பங்கேற்று முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்களுக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனா்.