பெரும்பான்மையை நிரூபிக்க அசிங்கமான அரசியல் செய்த தவெக! -டிடிவி தினகரன்
தவெக அரசின் மீதான நம்பிகை வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைத்ததைச் சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் கண்டனம்
சட்டப்பேரவையில் தங்கள் அரசின் மீதான நம்பிகை கோரும் தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஜனநாயக மாண்புகளை மீறி அசிங்கமான அரசியலை தவெக செய்ததாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சி சார்பில் வேட்பாளராக மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஆர். காமராஜ் எம்எல்ஏவாகப் பதவியேற்ற நிலையில், அவர் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கைகோப்பதாக ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, அவர் அமமுகவில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, இன்று (மே 13) சட்டப்பேரவையில் தவெக அரசின் மீதான நம்பிகை கோரும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர்களுக்கு தேவைக்கும் அதிகமான பெரும்பான்மை கிடைத்தது.
Advertisement
இதனைச் சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் இன்று (மே 13) இரவில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.