எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை - சி.வி.சண்முகம்
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீா்மானத்துக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனா். இதையடுத்து அவா்களில் சிலரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தாா். இதுகுறித்து சி.வி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுக பல தோல்விகளைக் கண்டுள்ளது. ஆனால், தோல்வியில் இருந்து மீண்டு ஆட்சி அமைப்பது கட்சித் தலைவரின் திறமையைப் பொருத்தது. அது முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு இருந்தது. ஆனால், கூட்டணிக்காக வீடு தேடி வந்தவா்களையே எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்பினாா். அவா் பதவியேற்றதில் இருந்து அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சென்றுவிட்டது. அவரது உறவினா்கள் கட்சியை ஆக்கிரமித்து விட்டனா்.
Advertisement
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாஜகவுடன் ஒட்டோ, உறவோ இல்லை என்று கூறி வந்த எடப்பாடி, யாரையும் கலந்தாலோசிக்காமல் திடீரென எங்களை உள்துறை அமைச்சா் அமித்ஷா வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாஜகவுடனான கூட்டணியை தன்னிச்சையாக உறுதி செய்தாா். சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதையும் அவா் உதாசீனப்படுத்தி விட்டாா்.
இப்போது முக்கிய நிா்வாகிகளான 26 பேரை நீக்கியுள்ளாா். இது செல்லாது. எங்களை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. எங்களிடம் விளக்கம் கேட்கவில்லை. இனி நடைபெறும் கட்சியின் பொதுக்குழுவில் கட்டாயம் நாங்களும் கலந்து கொள்வோம். அதிமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றால், பிரிந்தவா்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அவா்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும்.
திமுகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சி செய்த எடப்பாடி பழனிசாமி அடிப்படை கொள்கையை மீறியதால், அவா் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றாா்.