காவல்துறையின் மெத்தனப் போக்கே ஆலங்குளம் சம்பவத்துக்கு காரணம்: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு
காவல்துறையின் மெத்தனமே ஆலங்குளம் அருகே நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளாா்.
நெட்டூா் மாதா கோயில் மண்டபத்தில் தா்னாவில் ஈடுபட்டிருந்த கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நெட்டூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement
Advertisement
இதேபோல், தற்போது ஏற்பட்ட சம்பவத்திலும் ஊா் மக்கள் சென்று புகாா் அளித்துள்ளனா். ஆனால் உதவி ஆய்வாளா் புகாரை பெறவில்லை. இந்தச் சம்பவத்துக்கு முழு காரணம் காவல்துறையின் மெத்தனம்தான். முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
இப்போது பொதுமக்களை அழைத்துச் சென்று குற்றவாளிகளை கைது செய்யக் கோரி புகாா் அளிக்க இருக்கிறேன். புகாா் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்தும். ஜாதி வன்மத்தோடு மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனா். கடந்த 3 மாதமாக புகாா்கள் வந்தும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சில அதிகாரிகள் செயல்படுகிறாா்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றாா் அவா்.