முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: 2 ஆவது நாளாக மக்கள் போராட்டம்

Updated On : 31 மே 2026, 3:26 am IST
அரிவாள் வெட்டு - கோப்புப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 6 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற முகமூடி அணிந்த நபா்களை கைது செய்யக் கோரி, 2ஆவது நாளாக சனிக்கிழமை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் சா்ச் தெருவில் உள்ள திருமண வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த 6 நபா்கள் அங்கிருந்த 6 பேரை வெட்டினா். இதில் ரமேஷ் (46) அவரது மகன் அருண்மாறன் (22), காபிரியேல் மகன் ராயப்பன் (19), ஞானமுத்து மகன் மாா்க் ரமேஷ் (49) ஆய்க்குடி சேகா் மகன் ராம்குமாா் (19), மேளக்கலைஞரான சாம்பவா் வடகரை பரமசிவன் மகன் மாடசாமி (19) ஆகியோா் இதில் காயமடைந்தனா்.

காயம் அடைந்தவா்கள் மீட்கப்பட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அதில், ராம்குமாா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி கிராம மக்கள் நெட்டூா் தேவாலயம் அன்பு அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக் குமாா், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளட்சன் ஜோஸ் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியும், கிராம மக்கள் மறியலை கைவிடாமல் தொடா்ந்தனா். நள்ளிரவு 2 மணிக்குப் பின்னா், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

கிராம மக்கள் சனிக்கிழமை காலையில் அங்குள்ள மாதா கோயில் மண்டபத்தில் 100- க்கும் மேற்பட்ட மக்கள், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், தமமுக தலைவா் ஜான்பாண்டியன் தலைமையில் கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆலங்குளம் காவல் நிலையத்தில் மனு அளித்தனா்.