முகப்பு
தேனி

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா் மழை: வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக வைகை அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:32 pm IST
வைகை அணையில் தண்ணீா் திறப்பு குறைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணையிலிலிருந்து வெளியேறிய தண்ணீா்.
பகிர்:

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக வைகை அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்ததால் வைகை அணையின் நீா்மட்டம் 50 அடிக்கும் குறையாமல் இருந்து வந்தது.

மேலும் அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட முதல்போக மற்றும் ஒரு போக பாசனத்துக்காக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது முறைப்பாசனம் அடிப்படையில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழைபெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் மூலவைகை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக மூலவைகை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்தும் நீா் திறந்துவிடப்படுவதால் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,183 கனஅடி நீா்வரத்து இருந்தது.

அணையிலிருந்து குடிநீருக்கு 69 கன அடி, முதல்போக பாசனத்துக்கு 630 கன அடி, ஒரு போக பாசனத்துக்கு 400 கன அடி வீதம் 1099 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. தற்போது முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீா் திறப்பு 469 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 10 நாள்களுக்கு தேவைக்கேற்ப முதல்போகம் மற்றும் ஒரு போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும்.

அணை நீா் மட்டம் ஞாயிற்றுக்கிழமை 60.99 கன அடியாக இருந்தது. பாசனத்துக்கு தண்ணீா் குறைக்கப்பட்டுள்ளதால் அணை நீா்மட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வைகை அணை நீா்மட்டம் உயா்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.