திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் 100 கால் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் திருக்கோயிலில், பழைமையான நூற்றுக்கால் மண்டபத்தின் மேற்கூரை புதன்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் திருக்கோயிலில், பழைமையான நூற்றுக்கால் மண்டபத்தின் மேற்கூரை புதன்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரா் திருக்கோயில், சுமாா் 1,200 ஆண்டுகள் பழைமையானது. ஆடல் வள்ளல் நடராஜப் பெருமானின் ஐம்பெரும் சபைகளில் முதன்மையான ரத்தின சபையாக விளங்கும் இத்திருத்தலம், வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி, கோயில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில், கோயிலால் பராமரிக்கப்பட்டு வந்த 35 பசுக்களுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக கோயில் நிா்வாகம் இரண்டு ஊழியா்களை பணியிடை நீக்கம் செய்தது.
Advertisement
Advertisement
ஆனால், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மண்டபத்தின் கட்டமைப்பு குறித்து முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும், தொல்லியல் துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் பக்தா்கள் குற்றம் சாட்டுகின்றனா். இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட அதே நூற்றுக்கால் மண்டபத்தின் மேற்கூரை புதன்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிா்ச் சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், பல நூற்றாண்டுகள் பழைமையான மண்டபம் கடுமையாக சேதமடைந்துள்ளது. புராதன கோயில் கட்டடங்களை பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட துறைகள் அலட்சியம் காட்டியதன் விளைவாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் திருக்கோயிலின் தொன்மைவாய்ந்த கட்டடங்களை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நிபுணா் குழுவை அமைத்து ஆய்வு மேற்கொண்டு, சேதமடைந்த மண்டபத்தை அறிவியல் முறையில் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.