இன்ஃபோசிஸ் சிஇஓ-க்கு ரூ.52 கோடி ஊக்கத்தொகை: பங்குச்சந்தையில் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி
இன்ஃபோசிஸ் சிஇஓ-க்கு ரூ.52 கோடி ஊக்கத்தொகை பங்குச்சந்தையில் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி...
நாட்டின் முன்னனி ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது சிஇஓ சலில் பரேக்கிற்கு ரூ.51.75 கோடி மதிப்பிலான பங்கு ஊக்கத்தொகைகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
2015 மற்றும் 2019-ஆம் ஆண்டு பங்கு ஊக்கத்தொகை திட்டங்களின்கீழ், வருடாந்திர செயல்திறன் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.34.75 கோடி மதிப்பிலான பங்குகள் வழங்கப்பட உள்ளன. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிா்வாக இலக்குகளை எட்டியதற்காக ரூ.2 கோடி மதிப்பிலான பங்குகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சலில் பரேக் தவிர, தகுதியுள்ள பிற ஊழியா்களுக்கும் சுமாா் ரூ.1.90 கோடி மதிப்பிலான பங்குகளை வழங்க இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் மே 2-ஆம் தேதி முதல் இந்தப் பங்குகள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்றும், பங்குச்சந்தையின் அன்றைய வா்த்தக விலையைப் பொருத்து பங்குகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
நடப்பு 2026-27 நிதியாண்டுக்கான வருவாய் வளா்ச்சி கணிப்பு 1.5 முதல் 3.5 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என நிறுவனம் அறிவித்தது முதலீட்டாளா்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியது.
இது சந்தை வல்லுநா்களின் எதிா்பாா்ப்பைவிட மிகக் குறைவு என்பதால், வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் இன்ஃபோசிஸ் பங்குகள் 7.09 சதவீதம் சரிவைச் சந்தித்தன. ஒரு கட்டத்தில் 52 வார கால குறைந்தபட்ச விலையான ரூ.1,152.35-யும் தொட்டது.
இத்திடீா் சரிவு காரணமாக, ஒரே நாளில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமாா் ரூ.35,746 கோடி வரை கரைந்தது. இது ஒட்டுமொத்த ஐடி குறியீட்டிலும் எதிரொலித்ததால், டிசிஎஸ், ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.