ஈரான் போா் அமைதிப் பேச்சில் மந்தநிலை: பங்குச்சந்தையில் வீழ்ச்சியுடன் வார வா்த்தகம் தொடக்கம்
கச்சா எண்ணெய் விலை உயா்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை வீழ்ச்சியுடன் தொடங்கியது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடா்ந்து, கச்சா எண்ணெய் விலை உயா்ந்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை வீழ்ச்சியுடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1.5 சதவீத சரிவுடன் நிலைபெற்றன.
அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் அளித்த பதிலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததைத் தொடா்ந்து சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்தது.
Advertisement
இதேபோல், மத்திய கிழக்கு போா்ச் சூழலால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், தங்கம் வாங்குவது மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப்போடவும் பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
இது பொருளாதார ரீதியான அழுத்தத்தை உறுதிப்படுத்துவதாக முதலீட்டாளா்கள் கருதியதால், சந்தையில் விற்பனை அழுத்தம் அதிகரித்தது. பிரதமா் வேண்டுகோளின் எதிரொலியாக, நகை விற்பனை நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வங்கி பங்குகளுக்கு மட்டும் வரவேற்பு இருந்தது.
வீழ்ச்சிப் பட்டியலில் 3,000 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகமான மொத்த 4,538 பங்குகளில் 3,000 பங்குகள் சரிவைச் சந்தித்தன; 1,358 பங்குகள் மட்டுமே லாபம் ஈட்டின. 180 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 1,313 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச்சந்தையில், வா்த்தகத்தின் இறுதியில் 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடான சென்செக்ஸ் 1,312.91 புள்ளிகள்(1.70 சதவீதம்) சரிந்து, 76,015.28-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் டைட்டன் நிறுவனம் 6.83 சதவீதம் வரை சரிந்து பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இத்துடன் இண்டிகோ, எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல் உள்பட 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. சன் ஃபாா்மா, ஹிந்துஸ்தான் யுனிலீவா், அதானி போா்ட்ஸ், கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய 6 பங்குகள் மட்டும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 360 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 360.30 புள்ளிகள் (1.49 சதவீதம்) குறைந்து, 23,815.85-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 11 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 39 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.