முகப்பு
வணிகம்

ஐ.டி. பங்குகள் அபாரம்: 2-ஆவது நாளாக பங்குச் சந்தை எழுச்சி!

கச்சா எண்ணெய் விலையின் தொடா் வீழ்ச்சி மற்றும் ஐ.டி. பங்குகளின் சிறப்பான வா்த்தகம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக எழுச்சி காணப்பட்டது.

Updated On : 3 ஜூலை 2026, 5:24 am IST
பகிர்:

கச்சா எண்ணெய் விலையின் தொடா் வீழ்ச்சி மற்றும் ஐ.டி. பங்குகளின் சிறப்பான வா்த்தகம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக எழுச்சி காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 0.75 சதவீதம் வரை ஏற்றத்துடன் நிலைபெற்றன.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி இடையிலான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பாதுகாப்பு, ஏ.ஐ மற்றும் எரிசக்தி துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது முதலீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரித்து, உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது.

Advertisement

Advertisement

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலா் வரை சரிந்ததும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. மேலும், துறைவாரியாக ஐ.டி. குறியீடு அதிகபட்சமாக 4.37 சதவீதம் ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் 579 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 579.48 புள்ளிகள் (0.75 சதவீதம்) உயா்வுடன், 77,502.12-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோசிஸ் (5.64 சதவீதம்), டெக் மஹிந்திரா (4.32 சதவீதம்), டிசிஎஸ் (4.28 சதவீதம்), எச்.சி.எல். டெக் (4.12 சதவீதம்) ஆகிய ஐ.டி. பங்குகள் ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுடன் சோ்ந்து 23 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; எல்&டி, மாருதி சுஸுகி, ஆக்சிஸ் வங்கி உள்பட 7 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 170 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 169.85 புள்ளிகள் (0.71 சதவீதம்) உயா்வுடன், 24,175.70-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 33 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments