தணிக்கைக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்: ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
நிறுவனத்தின் வருவாயில் கிட்டத்தட்ட 99% மிகைப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது செபி, தற்போது இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
புதுதில்லி: இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம், சுமாா் ஐந்து ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம், அந்த வருவாயில் கிட்டத்தட்ட 99 சதவீதம் மிகைப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், தற்போது இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
2020-21 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாயை ரூ. 15.15 லட்சம் கோடி வரை மிகைப்படுத்திக் காட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில், பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின், கண்காணிப்பு வளையத்தில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்த தங்க நகை நிறுவனமான, 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்', செபி உத்தரவிட்டுள்ள தணிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், அதன் இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று தெரிவித்தது.
இதற்கிடையில், தணிக்கை செயல்முறையை நிறுவனம் தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ராஜேஷ் மேத்தா, விசாரணை அதிகாரிகளுக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement
செபி எங்களிடம் கேட்ட அனைத்து முக்கிய ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்துவிட்டோம். ஒரு வேலை ஏதோ ஆவணங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம், இல்லை என்றால் நாங்கள் வேறு ஏதாவது ஆவணங்களை கவனக்குறைவினால் விடுபட்டிருக்கலாம், அவை அனைத்தும் இப்போது சரிபார்க்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும், என்றார் ராஜேஷ் மேத்தா.
தங்கத்தை சுத்திகரிக்கும் மற்றும் நகை தயாரிக்கும் நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், தனது வெளிநாட்டு துணை நிறுவனங்கள், மூலம் பெரும் வருவாய் ஈட்டியதாகக் காட்டி, ஐந்து ஆண்டுகளில் தனது ஒருங்கிணைந்த வருவாயை ரூ. 15.15 லட்சம் கோடி வரை மிகைப்படுத்திக் காட்டியதாக செபி தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்த தகவல்கள் மேலோட்டமாகப் பார்க்கையில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ள செபி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் அறிவிக்கப்பட்ட வருவாயில் கிட்டத்தட்ட முழுப் பகுதியும் வெளிநாட்டு துணை நிறுவனங்களிடமிருந்தே வந்ததாகக் காட்டப்பட்டுள்ளதையும், ஆனால் அந்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இடைக்கால உத்தரவின் கீழ் கோரப்பட்ட ஆவணங்களை ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஏற்கனவே வழங்கத் தொடங்கிவிட்டதாகவும், அடுத்து வரும் ஐந்து முதல் ஆறு நாட்களுக்குள் அந்தப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தொடர்ந்து மூன்றாவது வர்த்தக அமர்வாக மும்பை பங்குச் சந்தையில் 5 சதவீத லோயர் சர்க்யூட் வரம்பை எட்டியுள்ளது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்.