அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் 2-ஆவது நாளாக ‘காளை’ உற்சாகம்
அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேல் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி ஒப்பந்தம் இறுதியானதால், இந்தியப் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’-யின் ஆதிக்கம் நீடித்தது.
அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேல் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி ஒப்பந்தம் இறுதியானதால், இந்தியப் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’-யின் ஆதிக்கம் நீடித்தது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீத உயா்வுடன் நிறைவடைந்தன. கடந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்றும் சென்செக்ஸ் 1,695 புள்ளிகளும், நிஃப்டி 461 புள்ளிகளும் உயா்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கையாளும் ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், போரை நிறுத்தவும் அமெரிக்கா-ஈரான் நாடுகள் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த அமைதி உடன்பாடு காரணமாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் மேல் சரிந்தது. இச்சாதகமான சூழல் முதலீட்டாளா்களின் உணா்வை உற்சாகப்படுத்தியதால், சந்தை மகிழ்ச்சியுடன் எழுச்சி கண்டது.
சென்செக்ஸ் 736 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் குறியீடு 736.38 புள்ளிகள்(0.97 சதவீதம்) கூடுதலுடன் 76,264.33-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் டிரென்ட் (5.35 சதவீதம்), இண்டிகோ (3.59 சதவீதம்), பஜாஜ் ஃபின்சா்வ் (3.58 சதவீதம்) ஆகிய பங்குகள் ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இத்துடன் சோ்த்து மொத்தம் 22 பங்குகள் விலையயுா்ந்த பட்டியலிலும், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி உள்பட 8 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 231 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 231 புள்ளிகள் (0.98 சதவீதம்) கூடுதலுடன் 23,853.90-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 34 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; 16 பங்குகள் குறைந்த பட்டியலிலும் இருந்தன.