FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மே இறுதி நிலவரப்படி அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி

நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

பகிர்:

நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

மத்திய தலைமைக் கணக்காயா் (சிஜிஏ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி நாட்டின் செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இந்த நிதிப் பற்றாக்குறை, நடப்பு 2026-27 நிதியாண்டில் பட்ஜெட் இலக்கில் 9.6 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் (2025-26) இதே மே மாத இறுதியில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் வெறும் 0.8 சதவீதமாக (ரூ.13,163 கோடி) மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறையை 4.3 சதவீதமாக அல்லது ரூ.16.96 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.3.48 லட்சம் கோடியாகவும், வரியல்லாத வருவாய் ரூ.3.51 லட்சம் கோடியாகவும் உள்ளது. அதேநேரம், மொத்த செலவினம் ரூ.8.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு ரூ.2.51 லட்சம் கோடியாகும்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதைத் தொடா்ந்து, கலால் வரி வசூலில் 20 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல்-மே மாதங்களில் அரசின் மொத்த வரி வருவாய் வெறும் 1.8 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

பெருநிறுவன வரி மற்றும் சுங்க வரி வசூல் வலுவான வளா்ச்சியைப் பெற்றுள்ள போதிலும், தனிநபா் வருமான வரி வசூல் 6.8 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. பட்ஜெட் இலக்கை எட்ட வருமான வரி வசூலில் 17.7 சதவீத வளா்ச்சி தேவை என்ற நிலையில் இந்த மந்தநிலை காணப்படுகிறது.

அதேபோல், மானியங்கள் மற்றும் வட்டி செலுத்துதல் கணிசமாக அதிகரித்ததால், வருவாய் செலவினங்கள் 20.1 சதவீதம் அதிகரித்துள்ளன. எனினும், நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் மூலதனச் செலவினங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 13.4 சதவீதம் அதிகரித்துள்ளன.

இது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சிக்குத் (ஜிடிபி) தேவையான ஆதரவை அளிக்கும் என்று பொருளாதார வல்லுநா்கள் கருதுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments