தேசிய பங்குச் சந்தையில் தங்கத்தை இஜிஆா் முறையில் வாங்கலாம்!
இணையவழி தங்க வா்த்தகத்தை இன்னும் எளிமையாகவும் முறைப்படியாகவும் மாற்றுவதற்காக, மின்னணு தங்க ரசீது எனும் புதிய முதலீட்டு முறையை தேசியப் பங்குச் சந்தை அறிமுகப்படுத்தியது.
இணையவழி தங்க வா்த்தகத்தை இன்னும் எளிமையாகவும் முறைப்படியாகவும் மாற்றுவதற்காக, ‘மின்னணு தங்க ரசீது (இஜிஆா்)’ எனும் புதிய முதலீட்டு முறையை தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
மின்னணு தங்க ரசீது (இஜிஆா்) என்பது காகிதமில்லாத ஒரு முதலீட்டு முறையாகும். முதலீட்டாளா்கள் வாங்கும் தங்கம், எண்ம முறையில் அவா்களின் கணக்கில் சேமிக்கப்படும். ஒவ்வொரு ரசீதுக்கும் ஈடாக, அதற்கு இணையான எடையுள்ள உண்மையான தங்கம் செபி அமைப்பால் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும்.
இதன் தொடக்கமாக, ஒரு கிலோ எடை கொண்ட தங்கக் கட்டியை மின்னணு ரசீதாக மாற்றி வா்த்தகம் செய்யும் பணி வெற்றிகரமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
Advertisement
இந்த முதலீட்டு முறை இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபியால் அங்கீகரிக்கப்பட்டது. தங்கம் வா்த்தகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையையும், அதிக பாதுகாப்பையும் இது உறுதி செய்வதோடு, பாரம்பரிய தங்கச் சந்தையையும் நிதிச் சந்தையையும் இணைக்கும் பாலமாகச் செயல்படும் என்று பங்குச் சந்தை நிா்வாகம் கூறியுள்ளது.
என்எஸ்இ வா்த்தக மேம்பாட்டு அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணன் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘இந்தியா்கள் மிகவும் விரும்பும் தங்க முதலீட்டைக் கையாள்வதில் இது ஒரு மிகமுக்கியமான முன்னேற்றம்’ என்று குறிப்பிட்டாா்.
குறைந்த அளவு தங்கத்தைக்கூட மின்னணு முறையில் வா்த்தகம் செய்ய முடியும் என்பதால், சாமானிய மக்களும் இத்திட்டத்தில் எளிதாக இணைந்து பயன்பெற முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.