முகப்பு
லீ குவான் யூ

35. திறமைசாலிகள் தேசம்

‘‘இயற்கை வளங்கள் இல்லாத சிறிய நாடான சிங்கப்பூரின் வெற்றியைத் தீர்மானிக்கப்போவது மக்களின் திறமைதான்” என்று லீ சொன்னார்.

Updated On : 12 டிசம்பர், 2015 at 3:05 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:18 PM

‘‘இயற்கை வளங்கள் இல்லாத சிறிய நாடான சிங்கப்பூரின் வெற்றியைத் தீர்மானிக்கப்போவது மக்களின் திறமைதான்” என்று லீ சொன்னார்.

நாட்டின் திறமைச் செல்வத்தை லீ எடைபோட்டார். நாட்டில் சீனர்கள், இந்தியர்கள், மலாய்கள் என்னும் மூன்று இனத்தவர்கள். பெரும்பாலான சீனர்கள் படிப்பறிவே இல்லாதவர்களாகத் தங்கள் நாட்டிலிருந்து வந்தவர்கள். விவசாயத் தொழிலாளிகளாக, சுமை தூக்கும் கூலிகளாக, ரிக்‌ஷா இழுப்பவர்களாக, உடல் உழைப்பாளிகளாக வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். இந்தியர்கள் ஆறு வகை - ரப்பர் எஸ்டேட் உழைப்பாளிகளாக, ரோடு போடுபவர்களாக, சாக்கடைகள் பராமரிப்பவர்களாக வந்தவர்கள், வியாபாரிகள், கணக்கர்கள், பூஜாரிகள். இரண்டாம் தரப்பினர் மட்டுமே படிப்பறிவு கொண்டவர்கள். சீனர்களையும், இந்தியர்களையும்விடப் பெரும்பாலான மலாய்கள், அதிகக் கல்வியறிவு கொண்டவர்கள். இவர்களும், அறிவியல் படிப்பில் நாட்டம் இல்லாதவர்களாக இருந்தார்கள். ஆனால், மூன்று இனத்தவரும், தங்கள் வாரிசுகள் வசதியான வாழ்க்கை நடத்த வேண்டுமானால், கல்வியில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

இதற்கு உதவியது பிரிட்டீஷார் ஆட்சி. நாட்டை அடிமைப்படுத்தியிருந்தது உண்மைதான். ஆனால், அறிவு வளர்ச்சிக்குப் பலமான அடித்தளம் அமைத்தார்கள். நல்ல பள்ளிகள், இங்கிலாந்து பாணியில் சிறந்த கல்வித் திட்டங்கள், அருமையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள். ராஃபிள்ஸ் கல்லூரி, ஏழாம் எட்வர்டு அரசர் மருத்துவக் கல்லூரி (King Edward VII Medical College) ஆகிய தலை சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள். கிறிஸ்தவப் பாதிரியார்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு இவற்றை நடத்தினார்கள். அதே சமயம், சீனர்கள் நடத்திய கல்விச்சாலைகளும் சோடை போகவில்லை. இந்த மாணவர்களின் ஆங்கிலப் புலமை தரமாக இல்லை என்பதுதான் ஒரே குறை. பணம் படைத்தவர்கள், மேல் படிப்புக்கு இங்கிலாந்து போனார்கள்.

Advertisement

1959-ல், லீயின் PAP கட்சி பதவிக்கு வந்தபோது, ஆட்சிமொழிகள் எவை என்னும் முடிவெடுக்க வேண்டும். நாட்டில் இருந்த இனங்களான சீனர்கள், மலாய்கள், தமிழர்கள் ஆகிய மூவரின் மொழிகளையும் அரசுக் கட்டிலேற்ற லீ முடிவு செய்தார். இவர்களுக்கு இணைப்புப் பாலமாக உதவ, உலக நாடுகளோடு சிங்கப்பூர் உறவுகள் வளர்க்க, பொருளாதார வளர்ச்சி காண, ஆங்கிலம் அவசியத் தேவை. ஆகவே, ஆங்கிலம், மான்டரின் சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவித்தார்.

அன்று இரண்டுவகைப் பள்ளிகள் இருந்தன - ஆங்கிலப் போதனா மொழிப் பள்ளிகள். மலாய், தமிழ், சீனப் பள்ளிகள். ஆங்கிலப் பள்ளிகளில் தாய்மொழியும், பிற மொழிப் பள்ளிகளில் ஆங்கிலமும் கட்டாயமாக்கப்பட்டன. சீனர்கள், தங்கள் மொழிப் பள்ளிகளையும்; பிறர், ஆங்கிலப் பள்ளிகளையும் விரும்பினார்கள். ஆனால், ஏராளமான மலாய்களுக்கும், தமிழர்களுக்கும் ஆங்கிலப் பள்ளி அட்மிஷனும், படிப்புச் செலவும் சிரமமாக இருந்தன. சீனர்கள் இன்னும் ஒருபடி மேலே போனார்கள். 1956-ல், நான்யாங் பல்கலைக் கழகம் தொடங்கியிருந்தார்கள். இங்கு போதனா மொழி சீனம். வேலை வாய்ப்புகள், ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கே கிடைத்தன, இதற்குத் தீர்வுகாண, அரசு 1980-ல், நான்யாங் பல்கலைக் கழகத்தை அரசுப் பல்கலைக் கழகத்தின் அங்கமாக்கியது. ஆங்கிலத்தை மட்டுமே கல்வி மொழி ஆக்கியது. ஏராளமான எதிர்ப்புகள், குறிப்பாகச் சீனர்களிடமிருந்து. லீ தன் நிலையில் உறுதியாக நின்றார். ஆங்கிலக் கல்வி முறை நிலைத்தது. இந்தத் துணிச்சலால், சீனப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை லீ போதனா மொழி ஆக்கினார். சீனர்களின் மான்டரின், இரண்டாம் மொழி.

அறிவு, உலகத்தரத் திறமை, கற்பனாசக்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, கட்டுப்பாடு கொண்ட இளைய தலைமுறையை உருவாக்குவது சிங்கப்பூர்க் கல்வித் திட்டத்தின் குறிக்கோள். இதன்படி, வகுக்கப்படுள்ள கல்விமுறை இதுதான் -

பாலர் பள்ளி (Kindergarten) - இரண்டு வருடங்கள். சேரும் வயது 5 அல்லது 6. படிப்பறிவு, எழுத்தறிவு, எண்ணறிவு ஆகியவற்றுக்குக் அடித்தளம் இடப்படுகிறது. தன்னம்பிக்கை, பழகும் திறமை ஆகியவற்றின் பயிற்சி ஆரம்பம்.

ஆரம்பப் பள்ளி - வகுப்புகள் 1 முதல் 6. ஆறு வருடப் படிப்பு. ஆங்கிலம், தாய்மொழி, கணிதம், அறிவியல், சமூகவியல், இசை, பிற நுண்கலைகள், உடற்பயிற்சி, விளயாட்டுகள், நன்னடத்தை (Moral Education), சிங்கப்பூர் பற்றிய பாடங்கள், பிறரிடம் பழகுதல், முடிவெடுத்தல் ஆகிய திறமைகளை வளர்த்தல் ஆகியவற்றோடு, வகுப்பில் கற்ற அறிவைப் பயன்படுத்தும் ஒரு ப்ராஜெக்ட்.

நடுநிலைப் பள்ளி - தேர்ந்தெடுக்கும் சப்ஜெக்டுகளுக்கு ஏற்ப, 4 அல்லது 5 வருடங்கள். ஆங்கிலம், தாய்மொழி, விரும்பினால் பிரெஞ்சு, ஜெர்மன், ஜாப்பனீஸ், சீனம்/மலாய்/தமிழ், உடற்பயிற்சி, விளையாட்டுகள், நன்னடத்தை (Moral Education), சிங்கப்பூர் பற்றிய பாடங்கள், பிறரிடம் பழகுதல், முடிவெடுத்தல் ஆகிய திறமைகளை வளர்த்தல்.

வருங்காலத்தில் எத்தகைய துறைகளை வாழ்க்கைப் பாதையாக அமைத்துக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதற்கு ஏற்ப பல பாடங்கள். அறிவியல் தொடர்பான ஈடுபாடு கொண்டவர்களுக்குக் கணிதம், பூகோளம், உயிரியல், வேதியல், இயற்பியல்; பொறியியல் நாட்டம் உடையவர்களுக்குக் கணிதம், வேதியியல், இயற்பியல், வடிவமைப்பு, தொழில்நுட்பம்; இலக்கிய, கலை விருப்பக்காரர்களுக்கு வரலாறு, ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி இலக்கியம், கலைகள், இசை; நிதித்துறை, நிர்வாகம் ஆகிய துறைகளில் நுழைய விரும்புவோருக்கு அக்கவுண்ட்டிங்; உடல்நலத் துறையில் வாழ்வை அமைத்துக்கொள்வோருக்கு ஊட்ட உணவுகள் (Nutrition) தொடர்பான பாடங்கள்.

புகுமுகு வகுப்பு - தேர்ந்தெடுக்கும் சப்ஜெக்டுகளுக்கு ஏற்ப, 1 அல்லது 2 வருடங்கள். மொழிகள், கணிதம், அறிவியல், வாழ்வியல் (Humanities), கலைகள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கேற்ப பாடங்கள் அமையும். கட்டாயப் பாடமாக தாய்மொழியும், ஆங்கிலமும் தவிர்த்த மூன்றாம் மொழி.

புகுமுக வகுப்புப் படிப்பை முடிக்கும்போது சாதாரணமாகப் பதினேழு வயதாகும். அடுத்து, பல்கலைக் கழகத்திலோ, பாலிடெக்னிக்களிலோ சேரலாம்.

இந்தக் கல்வித் திட்டத்தில் பயின்றுவரும் மாணவர்களின் தரம் எப்படி இருக்கிறது? பாரீஸை தலைமையமாகக் கொண்டு இயங்கும், Organization for Economic Co-operation and Development (OECD) என்னும் அமைப்பில் 76 நாடுகள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். இந்த நாடுகளில் இருக்கும் 15 வயது மாணவர்களின் கணித, அறிவியல் அறிவை எடைபோட, ஒவ்வொரு வருடமும் தேர்வுகள் நடத்துகிறது. இதன்படி, நம்பர் 1 - சிங்கப்பூர்! வேறு என்ன அங்கீகார முத்திரை வேண்டும்?

ஆசியாவின் அறிவுக்கேந்திரமாக சிங்கப்பூர் வளர்ந்திருக்கிறது. தேசியப் பல்கலைக் கழகம், நான்யாங் பல்கலைக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சிம் பல்கலைக் கழகம், யேல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் எனப் பல்வேறு பல்கலைக் கழகங்கள் இருகின்றன. பல பிரபல அமெரிக்க, இங்கிலாந்து, பிரெஞ்சுப் பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்கள் கிளைகளைச் சிங்கப்பூரில் பரப்பியிருக்கிறார்கள். கலைகள், வாழ்வியல், பொறியியல், சட்டம், மருத்துவம், மேனேஜ்மென்ட் என எல்லாப் படிப்புக்கும் தரத்தில், உலகப் பெரும் கல்வி நிலையங்களுக்குச் சிங்கப்பூர் சவால் விடுகிறது.

*****

மக்கள் அறிவை வளர்ப்பதில் இன்னொரு சவாலை லீ அடையாளம் கண்டார். 1980 மக்கள் தொகை அறிக்கையைப் படித்துக்கொண்டிருந்தார். ஆண்களோடு பெண்களும் படிப்பில் போட்டி போட்டார்கள். வேலைகளுக்குப் போனார்கள். பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தார்கள். எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று பெருமித முழக்கம் செய்தார்கள். மருத்துவர்களாக, பேராசிரியர்களாக, வழக்கறிஞர்களாக, நிர்வாகிகளாக ஜொலித்தார்கள்.

தன் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தைப் பார்த்து லீ பெருமைப்பட்டார். அதேசமயம், படித்த பெண்களின் மனப்போக்கில், வாழ்க்கை முறையில் ஒரு விசித்திரத்தைப் பார்த்தார். பட்டதாரிப் பெண்களில் மூன்றில் இரண்டு பேர் திருமணம் செய்துகொள்ளாமல் கன்னிகளாக வாழ்ந்தார்கள். காரணம் என்னவென்று ஆராய்ந்தார். பட்டதாரி ஆண்களில், 38 சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டிருந்தார்கள். ஏனோ, தங்களுக்குச் சமமாகப் படித்தவர்களை மனைவிகளாக ஏற்கத் தயங்கினார்கள்.

குழந்தைகளின் அறிவும், குணங்களும் 80 சதவீதம் பெற்றோரின் மரபணுக்களாலும், மீதி 20 சதவீதம் வளர்ப்பினாலும் அமைகிறது என்னும் ஒரு அமெரிக்க நாட்டு ஆராய்ச்சி பற்றி லீ படித்திருந்தார். இதை அவர் முழுக்க முழுக்க நம்பினார்.

1983, ஆகஸ்ட் 14 இரவு. சிங்கப்பூரின் தேசிய தினம். லீ பேசினார். அத்தனை ஊடகங்கள் வழியாகவும் மக்களைச் சென்றடைந்த செய்தி. அவர், ‘‘தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படும் எந்தப் பட்டதாரி ஆண் மகனும், தன்னைவிடக் குறைவாகப் படித்த, புத்திசாலித்தனம் குறைவான பெண்களைத் திருமணம் செய்துகொள்வது முட்டாள்தனம்”.

உலகம் முழுக்க எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. மாபெரும் திருமண விவாதம் (The Great Marriage Debate) என்று ஊடகங்கள் பெயர் சூட்டினார்கள். இரு தரப்பிலும், புள்ளிவிவரங்கள், அனுபவ அறிவுகள், ஆராய்ச்சி முடிவுகள், அனல் பறக்கும் வாதங்கள். இருவருமே, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

லீ வழி தனி வழி. தொடர்ந்தார். 1984-ல், Social Development Unit என்னும் அமைப்பை அரசாங்கம் தொடங்கியது. திருமணம் ஆகாத பட்டதாரி ஆண்களும், பெண்களும் சந்திக்க, பழக, சேர்ந்து நேரம் செலவிட, நடனமாட, டேட்டிங் செய்ய வசதிகள் செய்து தருவது இவர்கள் பணி. ஏராளமானோர் அங்கத்தினர் ஆயினர். லீயின் குறிக்கோள் நிறைவேறியது. 1980-களில், 38 சதவீதம் ஆண் பட்டதாரிகள் மட்டுமே பெண் பட்டதாரிகளைத் திருமணம் செய்துகொண்டிருந்தார்கள். இது, 2002-ல் 60-ஐ தாண்டியது. இவர்களின் வாரிசுகள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்னும் லீயின் சித்தாந்தம் சரியா, தப்பா? காலம் சொல்லும் பதிலை.

மக்கள் தொகை அறிக்கை, இன்னொரு உண்மையையும் லீக்குக் காட்டியது. அதிகம் படித்த பெண்கள், குறைந்த அளவு குழந்தைகளே பெற்றுக்கொண்டார்கள்.

  • பள்ளிக்கூடங்களில் மழைக்கே ஒதுங்காத பெண்கள் - சராசரி 4.4 குழந்தைகள்.

  • ஆரம்பப் பள்ளிக் கல்வி மட்டுமே பெற்ற பெண்கள் - சராசரி 2.3 குழந்தைகள்.

  • நடுநிலைப் பள்ளிக் கல்வியும், அதற்கு மேலும் படித்த பெண்கள் - சராசரி 1.6 குழந்தைகள்.

படிப்பறிவே இல்லாத பெண்கள் 4 குழந்தைகள் பெற்றுக்கொண்டபோது, ஓரளவேனும் படித்தவர்கள் இரண்டுக்கு மேல் வேண்டாம் என்றது ஏன்? வருமானத் தட்டுப்பாடு அல்ல. இவர்கள், தங்கள் வாரிசுகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். மூன்றாவது குழந்தை வந்தால், அதற்கு நல்ல பள்ளியில் அட்மிஷன் கிடைக்குமா என்னும் பயம். காரணம் தெரிந்தவுடன், லீ உடனடித் தீர்வு கண்டார். பெண் பட்டதாரிகளின் மூன்றாவது குழந்தைக்குச் சிறந்த பள்ளிகளின் அட்மிஷனில் முன்னுரிமை என்று அறிவித்தார். இந்த ஊக்குதல் பலன் தந்தது.

சிங்கப்பூரின் திறமையை வளர்க்க இப்படிப் பலவகை முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தபோது, வந்தது ஒரு அதிர்ச்சி. 1965 வரை ஆசிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்து அமெரிக்காவில் குடிபுக வருபவர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா கட்டுப்படுத்தியிருந்தது. 1965-ல், Immigration and Nationality Act of 1965 என்னும் சட்டம் கொண்டுவந்து, இதைத் தளர்த்தினார்கள். அமெரிக்காவைத் தொடர்ந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் அந்நியரை அதிக அளவில் அனுமதிக்கத் தொடங்கினார்கள்.

ஏராளமான சீனர்களும், இந்தியர்களும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள். வாய்ப்புக் கதவுகள் திறந்தவுடன், பிறந்த நாட்டைத் துறந்தார்கள். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக் குடிமக்கள் ஆனார்கள். பெரும்பாலானோர், அமெரிக்காவில். 1970-களின் பிற்பகுதியில், சிங்கப்பூரிலிருந்து போவோர் எண்ணிக்கை பல நூறாகத் தொடங்கியது. இவர்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்கள், மகா திறமைசாலிகள். சிங்கப்பூரின் ஒரே சொத்தே திறமைசாலிகள்தானே? இவர்கள் போவது சிங்கப்பூரின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் என்று லீ உணர்ந்தார். போர்க்கால நடவடிக்கைகள் தொடங்கினார்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்த சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள், அந்தந்த நாடுகளின் பிரபல பல்கலைக் கழகங்களில் படித்துக்கொண்டிருந்த புத்திசாலி ஆசிய மாணவர்களைச் சந்தித்தார்கள். படிப்புக்கான உதவித்தொகை அளித்தார்கள். சிங்கப்பூரில் இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கினார்கள். பலருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்களே தந்தார்கள். அரசு அதிகாரிகளும், நிறுவனங்களும் இந்தியாவுக்கும், மலேஷியாவுக்கும் விசிட் அடித்தார்கள். திறமைசாலிகளை வரவேற்றார்கள்.

சிங்கப்பூர் குடியுரிமையில் ஒரு சிக்கல் இருந்தது. குடிமக்களில் ஆண்கள் அயல்நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு பிறந்த நாடு திரும்பினால், கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள் ஆகிய அனைவரும் குடியுரிமை பெறுவார்கள். சிங்கப்பூர் பெண்கள் அயல்நாட்டவரைத் திருமணம் செய்தால், குடியுரிமை கிடையாது. ஆகவே, இந்தப் பெண்கள் சிங்கப்பூர் திரும்பவில்லை. 1990-ல், லீ குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தார். பெண்களுக்கும் சம உரிமை தந்தார்.

அயல்நாட்டுத் திறமைசாலிகள் சிங்கப்பூரில் பணியாற்ற வருவதற்கான வழிமுறைகளையும் லீ எளிதாக்கினார். லீயின் முயற்சிகள் பலன் தந்தன. 1990-களில், அயல்நாடு போகும் சிங்கப்பூரியர்களைவிட, வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் குடிமக்கள் ஆவோர் எண்ணிக்கை மூன்று மடங்கானது. இப்போது, சிங்கப்பூரில் சுமார் 14 லட்சம் வெளிநாட்டவர் பணி புரிகிறார்கள். லீ சொன்னார், ‘‘அயல்நாடுகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான இன்ஜினீயர்கள், மேனேஜர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என எல்லோருமே நாங்கள் வளர உதவியிருக்கிறார்கள். அவர்கள் உதவி இல்லாமல் இந்த அளவு வளர்ந்திருக்கமாட்டோம்”.

*****

மக்களின் திறமையை வளர்க்க, அறிவுத்தேடலைத் தூண்ட, அரசு எடுத்த இன்னொரு வித்தியாச முயற்சி, வாசிப்பு இயக்கம். 2003-ல், தேசிய நூலக போர்டு (National Library Board) ஒரு கணிப்பு நடத்தியது. இதன்படி கல்வி, வேலை தொடர்பான புத்தகங்களைத் தவிர்த்து, பொதுவான புத்தகங்கள் படிப்பவர்கள் 52 சதவீதமே. திறனாளர்களை வளர்க்கும் நாட்டுக்கு இது போதவே போதாதே?

ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்னும் நான்கு தேசிய மொழிகளில் இருந்தும் 12 புத்தகங்கள் தேர்ந்தெடுத்தார்கள். (இந்தப் பெருமைக்குரிய வரிசையில் இடம் பிடித்த ஒரு புத்தகம், ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’). அடுத்த 10 வாரங்களில், இவற்றில் பிடித்ததைப் படித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள அரசு பல விவாத மேடைகளை அமைத்தது. 190 நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், தொழிலாளிகள், டாக்ஸி ஓட்டுநர்கள், இல்லத்தரசிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என, சமூகத்தின் பல்வேறு தரத்தினரான 13,000 பேர் பங்கேற்றார்கள்.

தொடர்ந்து வருடா வருடம், வெற்றிகரமாக இந்த இயக்கம் தொடர்கிறது. இதன் ஒரு அம்சமாக, ஒரு மாதம் முழுக்க, வாசிப்புத் திருவிழா (Reading Festival) நடக்கிறது. எழுத்தாளர்கள் மேல் வெளிச்சம் போட்டு, அவர்களும், வாசகர்களும் நேரடியாகச் சந்திக்க வாசிப்பு இயக்கமும், திருவிழாவும் பெருமளவில் உதவுகின்றன.

Business Investment Risk Intelligence என்னும் அமெரிக்க ஆலோசனை நிறுவனம், Business & Working Conditions Report என்னும் வருடாந்தர ஆராய்ச்சி அறிக்கை வெளியிடுகிறது. இதன்படி திறமை, உற்பத்தித் திறன், அர்ப்பணிப்பு, நிர்வாகத்தோடு சுமுக உறவு ஆகிய அம்சங்களின் அடிப்படையில், உலகில் நம்பர் 1 சிங்கப்பூர்தான். இந்த கெளரவம் இன்று நேற்றல்ல. கடந்த 30 ஆண்டுகளாக, முதல் இடம் சிங்கப்பூருக்குத்தான். ஆமாம், திறமையை வளர்ப்பதில், லீயின் தேசத்தை மிஞ்ச யாருமே இல்லை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.